இந்த வருடத்தின் புனித ரமலான் மாதம் ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடைய இருப்பதால், ஈத் அல்-பித்ர் விடுமுறையானது மே மாதத்தின் தொடக்கத்திலேயே கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக ஓமானில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் இந்த மாதத்திற்கான அதாவது ஏப்ரல் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க ஓமான் அரசு அறிவித்துள்ளது.
ஓமானின் தொழிலாளர் அமைச்சகத்தின் படி, ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் வழங்க வேண்டிய ஏப்ரல் மாத சம்பளத்தை, வரும் ஏப்ரல் 21, 2022 க்கு முன்னதாகவே வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மே முதல் வாரத்தில் வரக்கூடிய ஈத் அல் பித்ர் பெருநாளை முன்னிட்டு தொழிலாளர் அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓமான் நாட்டின் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 4/2022 என்ற சுற்றறிக்கையின் படி, “ஈத் அல்-பித்ரை முன்னிட்டு தனியார் துறை நிறுவனங்கள் ராயல் ஆணை எண் மூலம் வெளியிடப்பட்ட தொழிலாளர் சட்டம் 35/2003 னின் விதிகளுக்கு இணங்க, அவர்களின் ஊழியர்களுக்கு ஏப்ரல் 2022 மாதத்திற்கான சம்பளத்தை, ஏப்ரல் 21, 2022 வியாழக்கிழமைக்கு முன்னதாகவே வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஓமானில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பானது ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில், ரமலான் நோன்பானது 29 நாட்களாக இருப்பின் மே 2 ம் தேதி ஈத் அல்-பித்ர் விடுமுறையாகவும், ரமலான் நோன்பானது 30 நாட்களாக இருப்பின் மே 3 ம் தேதி ஈத் அல்-பித்ர் விடுமுறையாகவும் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.