உலகளவில் 57 நாடுகளில் உள்ள 416 நகரங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 2021 ம் ஆண்டில் அபுதாபி உலகின் மிகக் குறைவான போக்குவரத்து நெரிசல் கொண்ட தலைநகரமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இந்த புதிய தரவரிசையானது, பகலில் பல்வேறு நேரங்களில் சந்திப்புகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் விகிதம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது என இந்த ஆய்வை மேற்கொண்ட டாம்டாம் டிராஃபிக் இண்டெக்ஸ் (TomTom Traffic Index- global navigation service company) தெரிவித்துள்ளது.
டிராஃபிக் லைட்ஸின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் புரோகிராமிங் மற்றும் நகரங்களில் போக்குவரத்து ஓட்டத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பையும் அது ஆய்வு செய்துள்ளது. மேலும் போக்குவரத்து விளக்கு அமைப்புகளின் நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் வானிலை எதிர்ப்பின் அடிப்படையில் அவற்றின் தரத்தையும் ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அபுதாபி 11% நெரிசல் அளவை பதிவு செய்து குறைவான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரமாக தேர்வாகியுள்ளது. இது நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையால் (DMT) செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் தாக்கத்தை பிரதிபலிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், சாலைச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் தேவையான பயன்பாடுகளின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்காக பொதுப் போக்குவரத்தின் விருப்பங்கள் மற்றும் போக்குவரத்து முறைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவை போக்குவரத்துத் துறையின் முக்கிய நோக்கங்களில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
DMT இன் தலைவரான ஃபலா அல் அஹ்பாபி கூறுகையில் “TomTom இன் புதிய தரவரிசை DMT இன் மூலோபாய இலக்குகளை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு ஊக்கமளிக்கிறது. தலைநகரின் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மேலாண்மை சேவைகளுக்கான உலகளாவிய அங்கீகாரங்களை தொடர்ந்து பெறுவது, அபுதாபியில் மிக உயர்ந்த சர்வதேச தரத்தை செயல்படுத்துவதன் மூலம் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கான எங்கள் தலைமையின் பார்வையை உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத்திற்கான நிலையான ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதன் மூலம், வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக அபுதாபியின் நிலையை வலுப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.