அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு ஈத் விடுமுறைக்காக சென்ற பயணிகள் தற்பொழுது திரும்பி வந்து கொண்டிருப்பதால் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விமானக் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் பல தனியார் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 அன்று தொடங்கிய விடுமுறையை முன்னிட்டு பலர் இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர் பயணித்துள்ளனர். பயணத்திற்கு முந்தைய கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்த ஆண்டு அதிகளவில் பயணம் மேற்கொள்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டினர் மற்றும் பயணிகள் தற்பொழுது அமீரகத்திற்கு திரும்பும் பயணங்களை மேற்கொள்வதால், இந்தியாவில் உள்ள சில இடங்களிலிருந்து அமீரகத்திற்கு பயணிப்பதற்கான ஒரு வழி டிக்கெட் விலையானது உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டிக்கெட் விலை உயர்வானது ஜூலை-செப்டம்பர் வரையிலான பள்ளி கோடை விடுமுறைகள் மாதங்கள் முடியும் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் சென்னை, கொச்சி, மும்பை மற்றும் கோழிக்கோடு போன்ற பிரபலமான இந்திய நகரங்களில் இருந்து அமீரகத்திற்கு திரும்பும் விமானங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“டிக்கெட் விலைகள் மே மூன்றாவது வாரத்தில் மட்டுமே 600 திர்ஹம்களுக்குக் குறைகிறது. அதன்பிறகு, அவை செப்டம்பர் வரை மிக அதிக விலையாக இருக்கும்,” என்று ஸ்மார்ட் டிராவல்ஸ் துபாயின் செயல்பாட்டு மேலாளர் மாலிக் படேகர் விளக்கியுள்ளார்.
கோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பல குடும்பங்கள், விலை உச்சத்தைத் தவிர்க்க ஜனவரி மாதத்திலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பதாக பயண முகவர்கள் கூறியுள்ளனர்.
“இந்த கோடை காலத்தில் டிக்கெட் விலை உயரும் என்று கணிக்கப்பட்டது. தொற்றுநோய் பரவலுக்குப் பின் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் பயணத்திற்கு முந்தைய PCR சோதனைகள் இல்லாமல் பயணம் செய்வது இதுவே முதல் முறை, ”என்று படேகர் கூறினார்.
இன்னும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத பல குடும்பங்கள், விலைகள் அதிகமாக இருப்பதால், தங்கள் பயணத் திட்டங்களை நிறுத்தி வைப்பதைக் கூட பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் வசிக்கும் தாமோதரன் கூறுகையில், “நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, நாங்கள் குறைந்தபட்சம் 7,000 திர்ஹம் செலுத்த வேண்டும், இது எங்களைப் போன்ற சாதாரண குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாது. எனக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மனைவி வேலை செய்யவில்லை, கொரோனா பரவல் காரணமாக நாங்கள் மூன்று ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு செல்லவில்லை. ஈத் விடுமுறையின் போது போகலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்; துரதிருஷ்டவசமாக, டிக்கெட் விலை மிக அதிகமாக இருந்தது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோம். அதனால் அடுத்த ஆண்டு கோடையில் நாங்கள் பயணம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
Musafir.com இன் குழு CEO ரஹீஷ் பாபு, கூறுகையில் “ஈத் விடுமுறை நாட்களில் பலர் சொந்த ஊருக்குப் பயணம் செய்தனர். அடுத்த இரண்டு மூன்று நாட்கள் கழிந்ததில் இருந்து, அந்த பயணிகள் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா பயணங்கள் மட்டுமின்றி வணிகப் பயணங்களும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக டிக்கெட் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் “பள்ளி கோடை விடுமுறைக்கு இன்னும் இரண்டு மாதங்கள்தான் உள்ளன. மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தைத் தவிர மற்ற நாட்களில் டிக்கெட் விலைகள் சரிவதற்கான வாய்ப்பில்லை. இந்த விலை உயர்வு செப்டம்பர் வரை தொடரும் என எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.
துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) ஏப்ரல் 29 முதல் மே 9 வரை பிரதான விமான நிலையத்தின் வழியாக சுமார் 1.9 மில்லியன் மக்கள் செல்வார்கள் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சராசரி தினசரி போக்குவரத்து 177,000 பயணிகளை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான நாளாக மே 7 இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நாளில் மட்டும் பயணிகள் எண்ணிக்கை 200,000 ஐ எட்டும் என்று தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
