ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் பாஸ்ப்போர்ட்டில் ஒட்டப்படும் ரெசிடென்சி விசா ஸ்டிக்கருக்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடிகள் அவர்களுக்கான ரெசிடென்சி அடையாளமாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் அமீரக அரசால் அறிவிக்கப்பட்டு அது தற்போது நடைமுறையிலும் வந்துவிட்டது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதுநாள் வரையிலும் நாம் அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும்போதோ அல்லது இந்தியாவிலிருந்து அமீரகம் வரும்போதோ இந்திய விமான நிலையங்களின் இமிகிரேசன் கவுன்டர்களில், நமது பாஸ்ப்போர்ட்டில் இருக்கும் விசா ஸ்டிக்கர் குடியுரிமை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னரே நாம் நமது பயணத்தை தொடர முடியும். ஆனால் தற்போது புதிதாக அமீரக ரெசிடென்சி விசா பெறுபவர்கள் அல்லது விசாவை புதுப்பிப்பவர்களுக்கு பாஸ்ப்போர்ட்டில் இந்த விசா ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை.
இது தவிர அமீரகத்திற்கு உள்ளேயும் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக நாம் நமது பாஸ்ப்போர்ட்டில் இருக்கும் விசா பக்கத்தினை சமர்ப்பிக்க வேண்டிய நிர்பந்தமும் இதற்கு முன்னர் இருந்து வந்தது. இவ்வாறான சூழ்நிலையில், நமது ரெசிடென்சி நிலை குறித்த விவரங்களை குடியுரிமை அதிகாரிகளுக்கு எவ்வாறு வழங்குவது? விசா ஸ்டிக்கரை பெறுவதற்கு வேறு ஏதேனும் வழி உண்டா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே காண்போம்.
எமிரேட்ஸ் ஐடி:
அமீரகத்தில் ஏப்ரல் 11, 2022 ம் ஆண்டு முதல் பாஸ்ப்போர்ட்டில் ஒட்டப்படும் விசா ஸ்டிக்கருக்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடிகள் பயன்படுத்தப்படும் என்று ICP அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், வெளிநாட்டவரின் வசிப்பிடத்திற்கான முதன்மை ஆதாரமாக எமிரேட்ஸ் ஐடிகள் பயன்படுத்தப்படும் என்பதையும் ICP உறுதிப்படுத்தியது.
கடந்த ஆண்டு, ஒரு அமீரக குடியிருப்பாளரின் விசா ஸ்டிக்கரில் இருக்கும் அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய புதிய தலைமுறை எமிரேட்ஸ் ஐடி அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த புதிய தலைமுறை எமிரேட்ஸ் ஐடியில் தனிப்பட்ட நபரின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு சிப் பொறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே எமிரேட்ஸ் ஐடியை கொண்டு நாம் நமது ரெசிடென்சி நிலையை நிரூபித்துக்கொள்ள முடியும்.
டிஜிட்டல் விசா ஸ்டிக்கர்:
அமீரகத்தை பொறுத்தவரை எமிரேட்ஸ் ஐடி என்பது பழக்கப்பட்ட ஒன்றாகும். இருப்பினும், ஏதேனும் ஒரு சூழலில் உங்களுக்கு பழைய விசா ஸ்டிக்கரை போன்ற ஒன்று தேவைப்படுமாயின், அதிகாரப்பூர்வ UAE ICP பயன்பாட்டின் மூலம் நமக்கு பழக்கமான இளஞ்சிவப்பு நிற ஸ்டிக்கரை டிஜிட்டல் முறையில் பெற முடியும். அதை பெறுவதற்கான படிப்படியான முறையை கீழே காணலாம்.
1. Apple மற்றும் Android மொபைல் போன்களில் கிடைக்கும் ‘UAEICP’ பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
2. உங்கள் UAE பாஸ் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும் அல்லது ICP இல் புதிய கணக்கைப் பதிவு செய்யவும்.
3. நீங்கள் பதிவு செய்தவுடன், உங்கள் குடியிருப்பு விவரங்களை ஆப் வழங்கும்.
4. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினருக்கோ அல்லது வீட்டுப் பணியாளருக்கோ ஸ்பான்சர் செய்தால், அவர்களின் கணக்குகளும் உங்கள் கணக்கில் இணைக்கப்படும், மேலும் அவர்களின் விவரங்களை நீங்கள் அணுக முடியும்.
5. திரையின் அடிப்பகுதியில் உங்களின் ஆவணங்களை கொண்டிருக்கும் ஒரு ஐகானை காணமுடியும். அதை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எமிரேட்ஸ் ஐடியின் டிஜிட்டல் நகலையும் ரெசிடென்சி ஸ்டிக்கரையும் அணுக முடியும்.
6. பின்னர் அதில் உங்கள் ரெசிடென்சி விசா ஸ்டிக்கரை பதிவிறக்க Download பட்டனை கிளிக் செய்யவும்.
7. இறுதியாக வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது பிற தளங்கள் மூலம் விசா ஸ்டிக்கரை பகிர ICP அப்ளிகேஷன் அனுமதிக்கும்.
அச்சிடப்பட்ட ரெசிடென்சி விசா:
உங்களின் ரெசிடென்சி விசாவை டிஜிட்டல் நகலாக இல்லாமல் அச்சிடப்பட்ட விசாவாக பெறவிரும்பினால், ICP இன் இணையதளம் மூலமாக உங்கள் ரெசிடென்சி விவரங்களை ICP முத்திரையுடன் அச்சிட முடியும். அதற்கான படிகளை இங்கே காணலாம்.
1. icp.gov.ae இல் உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
2. அதில் ‘துறை (department)’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் விசாவை வழங்கிய குடிவரவுத் துறையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அங்கே ‘தொகுதி’ பிரிவில், ‘பிற சேவைகள் (other services)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர் சேவைப் பிரிவில், ‘அறிக்கைகள் (reports)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. துணை சேவை பிரிவில், ‘குடியிருப்பு விவரங்கள் (residency details)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. சேவை நடவடிக்கையின் கீழ் ‘அச்சிடு (print)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
7. அதன்பின் உங்களுக்கு வதிவிட அறிக்கை தேவைப்படும் நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால், நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய விருப்பங்களாக அவர்களும் பட்டியலிடப்படுவார்கள். இல்லையெனில், உங்கள் குடியிருப்பு தகவலை தேர்ந்தெடுக்கவும்.
8. பின்னர் ICP அமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள தனிநபரின் விவரங்களை உறுதிப்படுத்தவும்.
9. தனிநபரின் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன் பணம் செலுத்த வேண்டும். (கோரிக்கை கட்டணம் – 50 திர்ஹம், இ-சேவைகள் கட்டணம் – 29.40 திர்ஹம், ICA கட்டணம் – 22 திர்ஹம், மொத்தம் – 101.40 திர்ஹம் )
10. நீங்கள் பணம் செலுத்தியவுடன், ICP இலிருந்து ரெசிடென்சி விசா அறிக்கையை பெற முடியும்.