ADVERTISEMENT

அமீரகவாசிகளே.. சொந்த ஊர் செல்ல திட்டமா..?? டிக்கெட் புக் செய்ய தாமதிக்காதீர்கள்.. பயண முகவர்கள் அறிவுரை..!!

Published: 27 May 2022, 4:58 PM |
Updated: 27 May 2022, 5:18 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களில் இந்த கோடை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்ல நினைப்பவர்களா நீங்கள்..?? தற்பொழுது வரை விமான டிக்கெட் முன்பதிவு செய்யவில்லையா..?? இனியும் கால தாமதம் செய்யாமல் இப்போதே முன்பதிவு செய்யத் தொடங்குவது நல்லது என பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான விமான கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த காலகட்டத்தில் அதிகளவு பயணிகள் அமீரகம், இந்தியா இடையே பயணிக்கவிருப்பதாலும் அதற்கு தகுந்தவாறு போதியளவு விமான சேவைகள் இல்லாமல் இருப்பதும் டிக்கெட் கட்டணம் அதிகமாவதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோடை காலத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை கடந்த 2019 ஆம் ஆண்டை விட 10-25 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

துபாய்-சென்னை, துபாய்-மதுரை, அபுதாபி-சென்னை, துபாய்-திருச்சி, ஷார்ஜா-கோயம்புத்தூர் என அனைத்து இடங்களுக்கு செல்லும் விமானங்களின் ஒரு வழி பயணத்திற்கான கட்டணங்களுமே ஜூன் மாதத்தில் 15,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றது. இது அடுத்தடுத்த மாதத்திலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கனெக்டிங் ஃப்ளைட்டில் பயணம் செய்ய விரும்பினால் கூட அந்த விமானங்களுக்கும் கட்டணமானது அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மற்றொரு பயண முகவர் வெளியிட்ட தகவலில் ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக எரிபொருள் விலையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியாவின் விமான சேவைக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமான திறன் இல்லாதது ஆகியவை சமீபத்திய வாரங்களில் விமானக் கட்டணங்கள்   உயர்வுக்கு வழிவகுத்தன என கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க விமானக்கட்டணங்கள் உயர்ந்துள்ள போதிலும் மக்களிடையே பயணிப்பதற்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதாகவும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும் இந்த கோடை காலத்தில் பயணிக்கவிருக்கும் நபர்கள் விரைவிலேயே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதே சாலச்சிறந்தது.

ADVERTISEMENT