அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் எலக்ட்ரானிக் டிராவில் நடக்க முடியாமல் வீல் சேரில் தனது வாழ்வைக் கழித்து வரும் இந்தியருக்கு பிக் டிக்கெட்டை வாங்கிக் கொடுத்துள்ளார் அவரது நண்பர் ஒருவர். தற்பொழுது அது 500,000 திர்ஹம் பரிசுத்தொகையை பெற்று தந்துள்ளது.
37 வயதான பினு பாலகுன்னேல் எலியாஸ், தனது நண்பரான ஷபீர் பணிச்சியில் (40) என்பவருக்கு 069002 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கிக் கொடுத்துள்ளார். தற்பொழுது அந்த டிக்கெட்டானது 500,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளது.
பினு நான்கு மாதங்களுக்கு முன்பு அமீரகத்தில் உள்ள ஒரு சலூனில் ஷபீரை சந்தித்ததையும் அவர்களின் நட்பு எப்படி வளர்ந்தது என்பதையும் பற்றி கூறுகையில், “நான் அபுதாபியில் முகமது பின் சயீத் பகுதியில் இரண்டு வருடங்களாக வசித்து வருகிறேன். ஒருமுறை நான் ஒரு சலூனுக்குச் சென்றபோது, ஷபீரை வீல் சேரில் சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, அவருடைய சோகத்தை நான் அறிந்தேன். ஷபீர் மொத்த காய்கறி வியாபாரம் செய்து வந்த போது ஒரு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட அதிர்ச்சி அவரது உடல்நிலையை கடுமையாக பாதித்திருக்கின்றது. அதனால் உயர் இரத்த அழுத்தம் ரத்தக்கசிவுக்கு வழிவகுத்து, மேலும் அவர் நான்கு மாதங்கள் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்துள்ளார்”என்று பினு கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஷபீர் பண சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், இருந்த போதிலும் அவர் பிக் டிக்கெட்டை வாங்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பினு கூறுகையில், “நாங்கள் நட்பை ஏற்படுத்திய பிறகு, ஷபீர் என்னிடம் டிக்கெட் வாங்கிக் கேட்டார். அவரது பணத்தில் நான் டிக்கெட் வாங்குவது இது மூன்றாவது முறையாகும்” என தெரிவித்துள்ளார்.
5 இலட்சம் திர்ஹம்ஸ் வெற்றி பெற்ற இந்த டிக்கெட்டானது ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள 20 மில்லியன் திர்ஹம்களின் மெகா டிராவிலும் பங்கேற்கும். இதன் மூலம் ஷபீருக்கு மற்றுமொரு முறை பிக் டிக்கெட் வெல்லும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.