ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராக பதவி வகித்த மாண்புமிகு ஷேக் கலீஃபா அல் நஹ்யான் அவர்களின் மறைவிற்குப் பின் அபுதாபியில் உள்ள அல் முஷ்ரிப் அரண்மனையில் கடந்த சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதில், எமிரேட்ஸ் ஆட்சியாளர்களை உள்ளடக்கிய ஃபெடரல் சுப்ரீம் கவுன்சில், அபுதாபியின் இளவரசரான மாண்புமிகு ஷேக் முகமது அவர்களை ஐக்கிய அரபு அமீரக அதிபராக ஒருமனதாக தேர்வு செய்ததாக அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய மற்றும் மூன்றாவது ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு உலகத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் “ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நீண்டகால நண்பரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வாழ்த்துகிறேன். ஷேக் முகமதுவிடம் எங்களது தொலைபேசி அழைப்பின் போது கூறியது போல், வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் நமது நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம் மறைந்த அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நினைவை போற்ற அமெரிக்கா உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது “இந்த துக்ககரமான சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த மற்றும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வலுவான மற்றும் வரலாற்று பிணைப்புகளின் தொடர்ச்சியை நான் எதிர்நோக்குகிறேன்.” என கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபி ஆட்சியாளருக்கும், ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிக பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “அபுதாபி ஆட்சியாளர் ஷேக் முகமது ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து ஆழமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்ததுகளை தெரிவித்ததோடு, “அரசின் தலைவர் பதவியில் உள்ள உங்கள் செயல்பாடுகள் நட்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் ரஷ்யாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான அனைத்து திசைகளிலும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கும் பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.
இவர்களோடு சீனா, குவைத், கத்தார், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், பிரான்ஸ், பாகிஸ்தான், அர்ஜென்டினா, கிரீஸ், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.