அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை திறந்தவெளி மற்றும் கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு இடைவேளையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விதியின் கீழ், நேரடியாக சூரிய ஒளி படும்படி வேலை செய்வது மதியம் 12:30-3 மணி வரை அனுமதிக்கப்படாது. இந்த முடிவானது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கும், கோடை மாதங்களில் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்ப அமைக்கப்பட்டதாகும்.
MoHRE இன் இன்ஸ்பெக்ஷன் அலுவல்களுக்கான துணை செயலாளரான முஹ்சின் அல் நாசி, தொடர்ந்து 18வது ஆண்டாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதியானது தொழிலாளர்கள் வெயில் சோர்வு மற்றும் வெயில் காலங்களில் பக்கவாதத்திற்கு ஆளாகும் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க குறைவுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மதிய இடைவேளையை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் என அபராதம் விதிக்கப்படும் என்றும் மதிய இடைவேளையை மீறி பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அதிகபட்சமாக 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல ஆண்டுகளாக இந்த மதிய இடைவேளையை செயல்படுத்த உறுதிபூண்டுள்ள தனியார் துறை நிறுவனங்களின் நேர்மறையான பங்கையும் ஆதரவையும் அல் நாசி பாராட்டியுள்ளார்.
மேலும் இந்த விதியனை மீறும் நிறுவனங்கள் மீது திங்கள் முதல் சனி வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, அமைச்சகத்தின் அழைப்பு மைய எண்ணான 600590000 என்ற எண்ணிற்கு அழைத்து தடை மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் அல்லது அமைச்சகத்தின் அப்ளிகேஷனில் சென்று தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.