அமீரகத்தில் கோடை விடுமுறை மற்றும் ஈத் அல் அத்ஹா விடுமுறை காரணமாக அதிகளவிலான பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கவிருப்பதால் அடுத்த இரு வாரங்களுக்கு விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கால கட்டத்தில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை விமான நிலையம் அறிவித்துள்ளது.
விமான நிலைய ஆபரேட்டரின் கூற்றுப்படி, ஜூன் 24 மற்றும் ஜூலை 4 க்கு இடையில் சுமார் 2.4 மில்லியன் பயணிகள் DXB வழியாகச் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சராசரி தினசரி போக்குவரத்து 214,000 பயணிகளை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் தினசரி போக்குவரத்தானது 235,000க்கும் அதிகமான பயணிகளுடன் ஜூலை 2 அன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதி ஈத் அல் அத்ஹா வார இறுதியின் போது இதேபோன்று அதிகளவு பயணிகள் விமான நிலையத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் ஏர்போர்ட்ஸ் குழுவானது, விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வணிக மற்றும் சேவை கூட்டாளர்களுடன் நெருக்கமாக இணைந்து பயணிகளுக்கு டெர்மினலில் நுழைந்தது முதல் போர்டிங் கேட் வரையிலான விமான நிலைய அனுபவத்தை எளிதாக்குவதற்கு உறுதிசெய்யும் அதே வேளையில், விடுமுறை நெரிசலை சமாளிக்க சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுமாறு பயணிகளை வலியுறுத்தியுள்ளனர்.
1. பயணிகள் தாங்கள் பயணிக்கும் இடத்திற்கான சமீபத்திய பயண விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும் மற்றும் விமான நிலையத்தை அடைவதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தேவையான செல்லுபடியாகும் தன்மையுடன் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
2. குடும்பத்துடன் பயணம் செய்பவர்களில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுடன் பயணிப்பவர்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்தலாம்.
3. பயணிகள் டெர்மினல் 1 ல் இருந்து பயணம் செய்யவிருந்தால், புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்துவிடுவது நல்லது. நேரத்தை மிச்சப்படுத்த, பயணிகள் எங்கு வேண்டுமானாலும் ஆன்லைனில் செக்-இன் செய்யலாம்.
4. டெர்மினல் 3ல் இருந்து பயணிப்பவர்கள் எமிரேட்டின் வசதியான ஆரம்ப மற்றும் சுய சேவை செக்-இன் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
5. வீட்டிலேயே சாமான்களை எடை போடுவது, ஆவணங்களை முன்கூட்டியே சரிபார்ப்பது மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு தயாராக இருப்பது போன்றவற்றை முடித்துக்கொண்டால் விமான நிலையத்தில் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும்.
6. துபாய் மெட்ரோவை விமான நிலையத்திற்குச் செல்லவும், திரும்பவும் பயணிகள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் ஈத் விடுமுறை நாட்களில் மெட்ரோ இயக்க நேரம் நீட்டிக்கப்படுகிறது.
7. டெர்மினல் 3 இல் உள்ள வருகை முன்தளத்திற்கான அணுகல் பொது போக்குவரத்து மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே என்பதால், பயணிகளின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் விமான நிலையத்தின் நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவையைப் பயன்படுத்தி பயணிகளை வரவேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.