இங்கிலாந்து விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் துபாய் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அதே நேரத்தில், அப்போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கிளம்பி இலங்கை தலைநகர் கொழும்புக்கு பறந்து கொண்டிருந்தது. ரஷ்யாவின் அங்காரா விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வந்த தகவலால் விமானி குழப்பமடைந்து உள்ளார்.
இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 275 பயணிகளுடன் கிளம்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் துருக்கி வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானிக்கு 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தை 35,000 அடி உயரத்தில் பறக்குமாறு அங்காரா விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்திருக்கிறது.
ஆனால், 15 மைல் தொலைவில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருப்பதை விமானி அறிந்திருக்கிறார். இதனையடுத்து இந்த விஷயத்தை அங்காரா விமான கட்டுப்பாட்டு அறைக்கு கூறிய விமானியிடம், 35,000 அடி உயரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துகொண்டிருப்பதால் 33,000 அடி உயரத்திலேயே பறக்குமாறு அதிகாரிகள் விமானியிடம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், கட்டுப்பாட்டு அறையிலிருந்து உயரத்தில் பறக்குமாறு கூறப்பட்ட தகவலை மறுத்த விமானியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கை விமான போக்குவரத்து துறை அந்த விமானிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது, “பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு எங்களது வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாய் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 250-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாகவும், நடுவானில் நேருக்கு நேர் இரண்டு விமானங்கள் மோத இருந்த நிலையில், சரியான நேரத்தில் செயல்பட்டு விபத்தை தவிர்த்த விமானிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.