இந்தியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, இறைத்தூதர் முஹம்மது நபி பற்றி வெளியிட்ட அவதூறு கருத்து பெரும் சர்சையாக வெடித்துள்ள நிலையில், அந்த கருத்துக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமீரக அரசு வெளியிட்ட கண்டன அறிக்கையில், முஹம்மது நபி மீதான அவமதிப்புகளையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக வெளியிடப்படும் அறிக்கைகளையும் அமீரகம் நிராகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) வெளியிட்ட அந்த அறிக்கையில், தார்மீக மற்றும் மனித மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணான அனைத்து விதமான நடைமுறைகள் மற்றும் நடத்தைகளை ஐக்கிய அரபு அமீரகம் உறுதியாக நிராகரிக்கும் என மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மதத்தினரின் மதச் சின்னங்களுக்கு மதிப்பளித்து, அவற்றை மீறாமல், வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மேற்கோள்காட்டியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், மக்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் மனித சகவாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளைப் பரப்புவதற்கான பகிரப்பட்ட சர்வதேசப் பொறுப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைத் தூண்டும் எந்த ஒரு நடைமுறைகளையும் அமீரகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் கூறப்பட்டுள்ளது.
முஹம்மது நபி பற்றி பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பேசிய அவதூறு கருத்துக்கு அமீரகம் தவிர, சவூதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமான் போன்ற மற்ற வளைகுடா நாடுகளும், மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளும், உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் தங்களது கண்டனத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.