ஐக்கிய அரபு அமீரகத்தில் நர்சிங் உரிமம் பெற இரண்டு ஆண்டு பணி அனுபவம் தேவைப்பட்ட நிலையில் தற்போது இந்த உரிமத்தை பெற இனி இந்த அனுபவம் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘யுனிஃபைட் ஹெல்த்கேர் புரொபஷனல் தகுதித் தேவைகள்’ அறிவுறுத்தலின் படி, நர்சிங் இளங்கலைப் பட்டம் பெற்ற, பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நர்சிங் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியைத் தவிர இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியதில்லை.
சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம், சுகாதாரத் துறை – அபுதாபி, துபாய் சுகாதார ஆணையம் மற்றும் ஷார்ஜா சுகாதார ஆணையம் ஆகியவை இணைந்து இந்த புதிய புதுப்பிப்பை வழங்கியுள்ளன. இப்போது வரை, பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தங்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு அமீரகத்தில் உரிமத் தேர்வுகளில் தோன்றுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் தேவையாக இருந்தது. இந்த தளர்வு இளம் மற்றும் தகுதி வாய்ந்த திறமைசாலி செவிலியர்கள்கள் அமீரகத்தில் பணிபுரிய வழி வகுக்கும். மேலும், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த செவிலியர்கள், நர்சிங் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு இது மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.
புதிய புதுப்பித்தலின் தேவைகள் மற்றும் பரிசீலனைகள் பிரிவின் படி, செவிலியர்கள் தேசிய அல்லது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரக பட்டதாரிகளுக்கு, திட்டமும் பல்கலைக்கழகமும் கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.