ஓமன் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அந்நாட்டு சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 200க்கும் மேற்பட்ட தொழில்களில் வெளிநாட்டவர்கள் பணியமர்த்தப்படுவதை அரசு தடை செய்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமன் தொழிலாளர் அமைச்சர் இது குறித்து கூறுகையில், இந்த முடிவு அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் என்றும், அது வெளியிடப்பட்ட தேதிக்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார். 2018 ஆம் ஆண்டில், அமைச்சகம் கிட்டத்தட்ட 10 துறைகளில் பரவியுள்ள 87 தொழில்களில் வெளிநாட்டவர்கள் பணி செய்வதை தடை செய்தது.
அரசு எடுத்துள்ள இந்த முடிவின் வெளிநாட்டவர்கள் 207 தொழில்களில் ஈடுபடுவது தடை செய்யப்படும் என்றும், தற்போதைய பணி அனுமதி காலாவதியாகும் வரை அவர்கள் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே வொர்க் பர்மிட் எனப்படும் வேலைக்கான அனுமதி காலாவதியானால், அவர்கள் தாய்நாடு திரும்ப நேரிடலாம்.
புதிய முடிவின் கீழ் நிர்வாக மேலாளர், பணியாளர் விவகார துறை மேலாளர், மனித வளத்துறை மேலாளர், மக்கள் தொடர்பு மேலாளர், பாதுகாப்பு மேற்பார்வையாளர், தொழில் வழிகாட்டல் மேலாளர், ஒருங்கிணைப்பாளர், தெரு வியாபாரிகள், மளிகை வியாபாரி, இனிப்பு விற்பனையாளர், தபால்காரர், வாட்ச்மேன், பண்ணை டிராக்டர் டிரைவர், டெலிவரி முகவர்கள், குளிரூட்டப்பட்ட லாரிகள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள், தண்ணீர் லாரிகள், எரிவாயு லாரிகள், குப்பை லாரிகள் மற்றும் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல பணிகள் இதில் அடங்கும்.