இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கான டிக்கெட் கட்டணங்கள் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கப்பட உள்ளன. ஏனெனில் விடுமுறை நாட்களில் இருந்து திரும்பும் வெளிநாட்டவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக துபாய் செல்லும் மற்றும் துபாயில் இருந்து இந்தியா வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமானங்களின் தேவையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இந்தியா-துபாய் விமான நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சியாசட் டெய்லியின் அறிக்கையின்படி இந்தியா-துபாய் செல்லும் டிக்கெட் விலை உயர்வு 40 முதல் 50 சதவிகிதம் உயரலாம் என தெரியவந்துள்ளது. மேலும் வணிகம் தொடர்பான விமானங்களும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து துபாய்க்கு டிக்கெட் கட்டணம் சுமார் ரூ 19,986 வரை உயர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இது தற்போதைய கட்டணமான ரூ 10,743 என்பதில் இருந்து மிக அதிகம். அதேபோல் மும்பையில் இருந்து துபாய் செல்லும் விமான டிக்கெட் செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ 17,189 ஆக இருக்கும் என்றும், தற்போது மும்பையில் இருந்து துபாய் செல்ல ரூ 11,817 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி, கொச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல விமான டிக்கெட்டுகளின் கட்டணங்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளது. பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொச்சி-துபாய் செல்ல ரூ.21,487 என கட்டணங்களை வசூலிக்கின்றன.
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது, எனவே விமான போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் திறனை மேம்படுத்தியுள்ளன. குறிப்பாக, துபாய் மற்றும் மும்பை இடையே அதிக பயணிகள் பயணம் செய்வதாக விமான ஆலோசனை அமைப்பு OAG அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மறுதொடக்கம் செய்ய ஏவியேஷன் ரெகுலேட்டரிடமிருந்து ஏர் ஆபரேட்டர் உரிமத்தையும் பெற்றுள்ளது.