துபாயில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் அமீரக கிளை சார்பாக இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று அதன் கிளை நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்டு 17 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக துபாயில் அமைந்துள்ள இலத்திப்பா மருத்துவமனையில் அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று ஆகஸ்ட் 28 ம் தேதி காலை 8.30 மணிக்கு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றுள்ளது.
இரத்ததானம் வழங்கும் இந்த நிகழ்வை எழுச்சித் தமிழராக அறியப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இணைய வழியாக நிகழ்வை துவங்கி வைத்து வாழ்த்துறை வழங்கி சிறப்பித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமீரக விசிகவின் நிர்வாகிகளான முதன்மை செயலாளர் கா.முத்தமிழ்வளவன், பொதுச் செயலாளர் அழ அசோகன், துணை பொதுச் செயலாளர் ராஜூ, பொருளாளர் கண்ணதாசன், தேரா மண்டல செயலாளர் ரமேஸ், அபுதாபி ஒருங்கிணைப்பாளர் அன்வர், தேரா ஒருங்கிணைப்பாளர் சுந்தர், பர்துபாய் ஒருங்கிணைப்பாளர் முத்தழகு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை பிரேம், வாகை கிரன்,வேலு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக அமீரகத்தில் இருக்கும் மற்ற கட்சிகளான திமுக, அமமுக, தேமுதிக, மதிமுக , எஸ்டிபிஐ, தமுமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் மற்றும் மொய்தீன், ஆசிப்மீரான், பிளால், பிர்தோஸ், போல் பிரபாகரன், அஸ்ஹர், உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமீரக கிளை சார்பாக நடத்தப்பட்ட இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் அமீரகத்திலுள்ள விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர்.