ஷார்ஜாவில் போலி மசாஜ் செண்டர்கள் வைத்திருந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. மசாஜ் செய்துகொள்ளவரும் வாடிக்கையாளர்களிடம் திருட்டு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி கைது செய்தனர்.
ஷார்ஜா காவல்துறையின் சிஐடியின் இயக்குநர் கர்னல் ஒமர் அபு அல் ஜூட் கூறுகையில், ரோல்லா பகுதியில் ஆசிய நாட்டை சேர்ந்த சந்தேகமிக்க நபர் ஒருவர் மசாஜ் கார்டுகளை விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது. திறமையான பாதுகாப்புக் குழுக்கள் சந்தேகமிக்க அந்த நபரின் வீட்டைச் சோதனையிட்டதில், அவரது வீட்டில் மசாஜ் சேவைக்கான விளம்பர அட்டைகளைக் கொண்ட பல பெட்டிகள் மற்றும் வெவ்வேறு அளவுகளில் கத்திகளை கண்டெடுத்தனர்.
பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட மற்ற கும்பலை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் திருடிய பணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்டறிந்தால் உடனடியாக புகாரளிக்குமாறும் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை கேட்டுக்கொண்டது.