அமீரகத்தில் விரிவாக்கப்பட்ட கோல்டன் விசா திட்டம், புதிய ஐந்தாண்டு குடியிருப்பு, பல நுழைவு சுற்றுலா விசா மற்றும் பணி நுழைவு விசா ஆகியவை அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த புதிய விசாக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நுழைவு மற்றும் வதிவிட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் வெளிநாட்டினர் மற்றும் பார்வையாளர்களுக்கு இந்த புதிய சீர்த்திருத்தம் குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும். இது வெளிநாட்டினர் அமீரகத்தில் நீண்டகாலமாக இருக்க விரும்பும் நபர்களுக்கு உதவும். ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அமீரகத்தின் அமைச்சரவை முடிவின்படி, நுழைவு மற்றும் குடியிருப்பு சட்டங்கள் தொடர்பான அனைத்து புதிய நிர்வாக விதிமுறைகளும் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட விசாக்களின் பட்டியல் கீழே கீழே குறீபிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலும் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும், அவற்றில் சில ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
MULTI ENTRY TOURIST VISA: இப்புதிய ஐந்தாண்டு விசாவுக்கு ஸ்பான்சர் தேவையில்லை மற்றும் அந்த நபர் 90 நாட்கள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க அனுமதிக்கப்படுகிறது, மேலும் 90 நாட்களுக்கு விசா நீட்டிக்கப்படலாம். இந்த சுற்றுலா விசாவில் ஒருவர் அதிகபட்சமாக 180 நாட்கள் தங்கலாம். இந்த விழாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் முன் கடந்த ஆறு மாதங்களில் 14,700 திர்ஹம்ஸ் வங்கி இருப்பு அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்கள் வைத்திருக்க வேண்டும்.
BUSINESS VISA: முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் இல்லாமல் வணிக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
உறவினர்கள்/நண்பர்களைப் பார்க்க விசா: ஒரு வெளிநாட்டவர், அமீரகத்தின் குடிமகன் அல்லது குடியிருப்பாளரின் உறவினர் அல்லது நண்பராக இருந்தால் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் இல்லாமல் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக பணி விசா: தகுதியான சோதனை அல்லது திட்ட அடிப்படையிலான பணி போன்ற தற்காலிக பணி நியமனம் உள்ளவர்கள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு தற்காலிக பணி ஒப்பந்தம் அல்லது வேலை வழங்குநரிடமிருந்து ஒரு கடிதம் மற்றும் உடற்தகுதி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
படிப்பு/ பயிற்சிக்கான விசா: இந்த விசா பயிற்சி, படிப்பு படிப்புகள் மற்றும் இன்டர்ன்ஷிப் திட்டங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விசா மூலம் பொது மற்றும் தனியார் துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யலாம். மேலும் படிப்பு அல்லது பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விவரங்களையும் அதன் கால அளவையும் தெளிவுபடுத்தும் நிறுவனத்திடமிருந்து கடிதம் பெறுவது அவசியமாகும்.
குடும்ப விசா: முன்பு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்ய முடியும். இப்போது ஆண் குழந்தைகளுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்ய முடியும். மாற்றுத்திறனாளி குழந்தைகளும் சிறப்பு அனுமதி பெறலாம், மேலும் திருமணமாகாத மகள்களுக்கு காலவரையின்றி நிதியுதவி செய்யலாம்.
வேலை விசா: வேலை தேடுபவர்கள் அமீரகத்தில் உள்ள வாய்ப்புகளை ஆராய இந்த புதிய விசாவைப் பெறலாம். இந்த விசாவிற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.
கிரீன் விசா: இந்த ஐந்தாண்டு விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பங்களை ஸ்பான்சர் அல்லது முதலாளி விருப்பம் இல்லாமல் அழைத்து வர அனுமதிக்கிறது. இந்த விசா திறமையான தொழிலாளர்கள், சுய தொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் போன்றவர்களுக்கு கிடைக்கிறது.
கோல்டன் விசாக்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க விரும்பும் பல தொழில்முறை பிரிவுகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கோல்டன் விசா வழங்க அறிவித்துள்ளது. வெவ்வேறு பிரிவுகளுக்கான கோல்டன் விசாக்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ரியல் எஸ்டேட்: விசாவிற்குத் தகுதிபெற, ரியல் எஸ்டேட்டில் குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம்ஸ் முதலீடு தேவை. முதலீட்டாளறின் மொத்த முதலீடு 2 மில்லியன் திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் இருந்தால் அனுமதிக்கப்படும்.
ஸ்டார்ட்அப்கள்: தொழில்முனைவோர் இப்போது கோல்டன் விசாவை மூன்று வகைகளின் கீழ் பெறலாம் – (1) ஸ்டார்ட்அப் நாட்டில் பதிவு செய்யப்பட வேண்டும், (2) SME கீழ் வர வேண்டும், (3) ஆண்டு வருமானம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
விஞ்ஞானிகள்: அமீரக சயின்ஸ் கவுன்சிலின் பரிந்துரை மற்றும் வாழ்க்கை அறிவியல், இயற்கை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் ஒரு உயர் பல்கலைக்கழகத்தில் இருந்து PhD அல்லது முதுகலை பட்டத்தை பூர்த்தி செய்த திறமையானவர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் கலை, கலாச்சாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் சிறப்பான திறமை உள்ளவர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்திடம் இருந்து பரிந்துரை கடிதம் அல்லது ஒப்புதல் பெற வேண்டும்.
திறமையான தொழிலாளர்கள்: விண்ணப்பதாரர் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், சரியான வேலை ஒப்பந்தம், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் வரையறுத்துள்ள தொழில் நிலை ஒன்று அல்லது இரண்டின் கீழ் வர வேண்டும், மேலும் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 30,000 திர்ஹம்ஸ் ஆக இருக்க வேண்டும்.
மாணவர்கள்: அமீரகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ள விதிவிலக்கான மாணவர்கள் அல்லது உலகளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மாணவர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.