அமீரகத்தில் பெய்த கனமழை காரணமாக ஜூலை 27 அன்று மூடப்பட்ட கோர்ஃபக்கனின் அல் சுஹுப் சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்பட்டதாக ஷார்ஜா அறிவித்துள்ளது. கிளவுட் லவுஞ்ச் என்று அழைக்கப்படும், ஓய்வு பகுதிக்கு பார்வையாளர்கள் பலர் வந்து செல்வதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.
கிளவுட் லவுஞ்ச் என்னும் மலைப்பக்க ஓய்வு பகுதியான இது, கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில், 5.63 கிலோ மீட்டர் தொலைவில் 2021இல் திறக்கப்பட்டது. கடந்த வாரம் அமீரகம், கோர்ஃபக்கான் உட்பட பல பகுதிகளில் பெய்த கனமழையால், மக்களின் பாதுகாப்பிற்காக பல சாலைகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.
தற்போது சாலைகளில் மழை நீர் வடிந்ததால், ஷார்ஜாவின் முக்கிய சாலைகள் திறக்கப்பட்டன, மேலும் ஷார்ஜாவிலிருந்து ஃபுஜைரா மற்றும் கல்பா வரையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.