ஐ.ஐ.டி-களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கான மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் கலந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை “இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி” பிராண்ட் பெயரின் கீழ் வெளிநாட்டு வளாகங்களுக்கு வருங்கால இடங்களாக அடையாளம் கண்டுள்ளது என்பதை தி சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி கவுன்சில் நிலைக்குழுத் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட குழு, கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த ஏழு நாடுகளும் பல முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு நிலை, கல்விப் பாரம்பரியம், தரமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் உகந்த சுற்றுச்சூழல் அமைப்பு, ஒழுங்குமுறை ஏற்பாடுகள் மற்றும் இந்தியாவின் “பிராண்டிங் மற்றும் உறவை” மேம்படுத்துவதற்கான சாத்தியமான நன்மைகள் ஆகியவை அடங்கும்.
இந்த அறிக்கையானது 26 இந்திய தூதரகங்களின் தலைவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது, வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார பிரிவு பிப்ரவரி 2 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் குழுவிற்கும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையே இரண்டு மெய்நிகர் அமர்வுகளை ஏற்பாடு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, “பிர்மிங்காம் பல்கலைக்கழகம், கிங்ஸ் கல்லூரி லண்டன், எக்ஸிடெர் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றிலிருந்து ஆறு உறுதியான ஒத்துழைப்பு திட்டங்களை தூதரகம் பெற்றுள்ளது”.
“பல்கலைக்கழகங்களுக்கும் ஐ.ஐ.டி குழுவிற்கும் இடையே ஒரு சந்திப்புக்கு எங்கள் தூதரகம் பல கோரிக்கைகளை வைத்துள்ளது. இந்த முன்மொழிவை முன்னெடுப்பதற்கு விரிவான கருத்துக் குறிப்பு மற்றும் நோடல் தொடர்புப் புள்ளியை அது மேலும் கோரியுள்ளது,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த அறிக்கை கூறியது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஐ.ஐ.டி-டெல்லி விருப்பமான தேர்வாக இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. அறிக்கையின்படி, எகிப்து 2022-23 முதல் நேரடியாக இல்லாவிட்டாலும், ஆன்லைனில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் சதவீதம் 20%க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. ஐ.ஐ.டி டெல்லி ஏற்கனவே அபுதாபியில் கல்வி மற்றும் அறிவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, அதே நேரத்தில் ஐ.ஐ.டி சென்னை, இலங்கை, நேபாளம் மற்றும் தான்சானியாவில் விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.