ADVERTISEMENT

அமீரகத்தில் மீண்டும் ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Published: 3 Aug 2022, 8:02 PM |
Updated: 3 Aug 2022, 8:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) புதன்கிழமை (இன்று) குடியிருப்பாளர்களுக்கு ரெட் அலர்ட்டை வெளியிட்டதுடன் தீவிர அபாயகரமான வானிலை இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட தகவலில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழையை அல் அய்ன் காணும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடியிருப்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அல் அய்னில் இருக்கக்கூடிய அல் திவாயா, அல் கத்தாரா, நஹில், பதா பின்த் சவுத் மற்றும் அல் அமேரா ஆகிய இடங்களில் உள்ள பல பகுதிகளில் அபாயகரமான வானிலை நிலவுகிறது. அப்பகுதிகளில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகவும், அங்கு வானிலை மோசமாக இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், மிகுந்த கவனத்துடன் இருக்கவும், பள்ளத்தாக்குகள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பகுதிகளைத் தவிர்க்கவும் NCM கேட்டுக் கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் அல் அய்ன் பகுதியில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழையைக் காட்டுகின்றன. அல் அய்ன் நகரின் பள்ளத்தாக்குகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்குமாறு அபுதாபி காவல்துறையும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் எலக்ட்ரானிக் சைன் போர்டுகளில் காட்டப்படும் மாறுபட்ட வேக வரம்புகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மோசமான வானிலையின் போது அபுதாபியில் வேக வரம்புகள் சில சாலைகளில் தானாகவே 80kmph ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.