அமீரகத்தில் தொழிலாளி ஒருவரின் வேலை ஒப்பந்தமானது குறுகிய கால வேலை ஒப்பந்தமாக இல்லாமல் இருந்து, ஒரு தொழிலாளியின் ஊதியமானது ஊதியம் வழங்கப்பட வேண்டிய உரிய தேதியின் முதல் 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால், அது தாமதமாக கருதப்படும் என்று அமீரக அரசின் டிஜிட்டல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MOHRE) கூற்றுப்படி, முதலாளிகள் தொழிலாளர்களின் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வேண்டும், அத்துடன் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட ஊதிய பாதுகாப்பு முறைக்கு இணங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும், அவை பணியில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். MOHRE இன் ஆய்வு விவகாரங்களுக்கான துணை செயலாளரான முஹ்சின் அல் நாசி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியுடனான கூட்டாண்மை மூலம் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கான கடமைகளை சுமூகமாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் சரியான நேரத்தில் ஊதியம் பெறுவது தொழிலாளர்களின் முக்கிய உரிமையாகும், அதனை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“தொழிலாளர்களின் தேவையை நிவர்த்தி செய்யத்தவறும் நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் ஊதிய தாமதம், ஊதியம் பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்” என்று முஹ்சின் தெரிவித்தார்.
MOHRE இன் படி, சரியான நேரத்தில் ஊதியம் கொடுக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS) இல் தவறான தரவுகளை வழங்கும் நிறுவனங்கள் மீது ஒரு தொழிலாளருக்கு 5000 திர்ஹம்ஸ் என்ற முறையில் குறைந்த பட்சம் 5,000 திர்ஹம்ஸ் முதல் அதிகபட்சம் 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் WPS-க்கு உரிய தேதிகளில் பணம் செலுத்த தவறும் நிறுவனத்தின் மீது ஒரு தொழிலாளிக்கு 1,000 திர்ஹம்ஸ் என்ற முறையில் அபராதம் விதிக்கப்படும்.
ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனிலும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் MOHRE செயலி மூலம் ஊதியம் பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதங்களை நிறுவனத்தின் முதலாளிகள் பார்க்கலாம்.