சமூக வலைதளத்தில் உதவிக்காக பண மோசடி கும்பல் அதிகளவில் உலா வருவதாக அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை பயன்படுத்தி, தொழில்நுட்ப ஆர்வலர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரைக் குறிப்பிட்டு உதவி கோருவது போல மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போலி ட்விட்டர் கணக்கில் @embassy_help என்று மென்ஷன் செய்து அதிகாரப்பூர்வ அரசு பக்கம் மற்றும் மின்னஞ்சல் ஐடியான ind_embassy.mea.gov@protonmail.com ஐப் பயன்படுத்தி, 700 திர்ஹம்ஸ் முதல் 1800 திர்ஹம்ஸ் வரை மோசடி செய்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு விமான டிக்கெட் பெற்றுத்தருவதாகவும், விசா பெற்றுத்தருவதாககும் ஏமாற்றி வசூலிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் இந்திய தூதரகத்தில் பல புகார்களைப் அளித்துள்ளனர். இது தொடர்பாக தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், மோசடி குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்திய தூதரகம் என்ற பெயரில் போலியான சமூக ஊடக கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மோசடி கும்பலிடம் பணங்களை வழங்காமல் பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.