அமீரகத்திற்கு பயணம் செய்யும் 73 நாட்டினருக்கு விசா பெறும் நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான இயக்குநரகம் விமான நிறுவனங்களுக்கு வெளியிட்டுள்ள தகவலின்படி, 73 நாடுகளிலிருந்து பயணம் செய்பவர்கள் அமீரகத்திற்கு வந்த பிறகு விசா எடுத்துக் கொள்ள தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாள்கள் முதல் 180 நாள்கள் வரை அமீரகத்தில் இலவச விசா பெற்று தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
30 நாள் விசாக்களுக்கு தகுதியுடைய நாடுகள்:
ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஹாங்காங், ஜப்பான், நியூசிலாந்து, மலேசியா, அயர்லாந்து, சிங்கப்பூர், உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் அமீரகம் வருவதற்கு முன்பாக விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அமீரக விமானங்களில் பயணம் செய்து, விமான நிலையங்களில் தரையிறங்கியவுடன் குடிவரவுத்துறை அலுவலகத்திற்கு சென்று கடவுச்சீட்டை காண்பித்து இலவசமாக 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
90 நாள் விசாக்களுக்கு தகுதியுடைய நாடுகள்:
ஆஸ்திரியா, அர்ஜெண்டினா, பெல்ஜியம், பிரேசில், கொழும்பியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, மாலத்தீவு, போலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், தென் கொரியா உள்ளிட்ட 53 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 90 நாள்கள் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
மெக்ஸிகோ நாட்டின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 180 நாள்கள் வரை தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
அதேபோல், இந்திய கடவுச்சீட்டு, அமெரிக்காவால் கொடுக்கப்பட்ட வருகை விசா, பிரிட்டன் மற்றும் ஐரோப்ப நாடுகளின் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் 14 நாள்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசா காலத்தை நீட்டிக்க விரும்புவோர் விமான நிலையங்களில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு திட்டங்களை அரபு அமீரகம் அமல்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய வசதியின் மூலம் மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கக்கூடும்.