ADVERTISEMENT

துபாய்: விமான நிலையம் செல்லும் பயணிகள் முக கவசம் அணிய வேண்டுமா..?? அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு என்ன..??

Published: 28 Sep 2022, 1:48 PM |
Updated: 28 Sep 2022, 6:00 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இனி பொது இடங்களில் முக கவசம் அணிய தேவையில்லை என்றும் விமானங்களில் முக கவசம் அணிவது அந்தந்த விமான நிறுவனங்களைப் பொறுத்தது என்றும் அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து விமான நிலையங்களில் முக கவசம் அணிய வேண்டுமா இல்லையா என்பது குறித்த சந்தேகங்கள் பயணிகளிடையே நிலவி வந்த நிலையில் இதற்கு தற்பொழுது விமான நிலையங்கள் விளக்கமளித்துள்ளன.

ADVERTISEMENT

அதன்படி துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் கொரோனா கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, துபாய் இன்டர்நேஷனல் (DXB) எனப்படும் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) ஆகியவற்றில் பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று துபாய் விமான நிலையங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் இனி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அரசு அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விமான அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இது பற்றி தெளிவுபடுத்துகையில், விமான நிறுவனங்கள் அவற்றின் குறிப்பிட்ட தேவைகள் அல்லது டிரான்சிட் அல்லது சென்றடைய வேண்டிய இடங்களுக்கு பொருந்தும் விதிகளின் அடிப்படையில், தேவைப்பட்டால் விமானத்தில் முக கவசத்தை அணியுமாறு பயணிகளைக் கேட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு எங்களின் முதன்மையான முன்னுரிமை மற்றும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விமான நிலைய சூழலை உறுதி செய்வதற்காக துபாய் விமான நிலையங்கள் ஒழுங்குமுறை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சேவை கூட்டாளர்களுடன் நெருக்கமாக செயல்படுகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதே போல் துபாயை மையமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று உறுதிபடுத்தியுள்ளன.

இருப்பினும் இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்கிறீர்கள் அல்லது துபாய் வழியாக பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கான முக கவச விதிகள் உங்கள் பயணம் முழுவதும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.