உலகையே பிரமிக்க வைத்த எக்ஸ்போ 2020 துபாய் தற்போது மீண்டும் பார்வையாளர்களுக்கு திறக்கப்படவுள்ளது. அக்டோபர் 1, 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை நடந்த உலகின் மிகப்பெரிய கண்காட்சியான எக்ஸ்போ-2020 துபாய் 24 மில்லியன் வருகைகளைப் பதிவு செய்துள்ளது.
எக்ஸ்போ சிட்டி துபாயின் முக்கிய இடமான அல் வாஸ்ல் பகுதியில் பிரமிக்க வைக்கும் மற்றும் அழகாக செயல்படுத்தப்பட்ட காட்சிகள் நாளை (அக்டோபர் 1, சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு ஆரம்பிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி Al Wasl இன் 360-டிகிரி ப்ரொஜெக்ஷன் மீண்டும் பார்வையாளர்களை அற்புதமான காட்சியுடன் பிரமிக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எக்ஸ்போ சிட்டி துபாயின் அதிகாரப்பூர்வ துவக்கத்தையும் இது குறிக்கும் என்றும், இந்த மாத தொடக்கத்திலேயே அலிஃப் (மொபிலிட்டி) மற்றும் டெர்ரா (சஸ்டெயினபிலிட்டி) பெவிலியன்கள் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அல் வாஸ்ல் பகுதியில் வாரத்தின் ஐந்து நாட்களில் இந்த சிறப்பு காட்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதன் முதல் ஞாயிறு வரை மாலை நேரங்களில் அற்புதமான காட்சிகள் அதற்குரித்தான இசையுடன் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவசமாக பார்வையிட அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று, எக்ஸ்போ சிட்டி துபாய் ஒரு நாள் அட்ராக்ஷன்ஸ் பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அக்டோபர் 1 முதல் செல்லுபடியாகும் என்றும் இது பார்வையாளர்கள் 120 திர்ஹமிற்கு அதன் அனைத்து முக்கிய பெவிலியன்களையும் காண அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் கிடைக்கும், அட்ராக்ஷன்ஸ் பாஸ் ஆரம்பத்தில் பார்வையாளர்களுக்கு விஷன் பெவிலியன் மற்றும் வுமன்ஸ் பெவிலியன் மற்றும் டெர்ரா மற்றும் அலிஃப் பெவிலியன்களுக்கான அணுகலை வழங்கும் என்றும், மேலும் அவை திறக்கும் போது பெவிலியன்கள் மற்றும் பல்வேறு ஈர்ப்புகளை உள்ளடக்கும் வகையில் உருவாகும்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எக்ஸ்போவிற்கு இலவசமாக செல்லலாம் ஆனால் எக்ஸ்போ சிட்டி துபாயின் டிக்கெட் கவுண்டர் ஒன்றில் அவர்களின் காம்ப்ளிமெண்ட்டரி பாஸை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் சர்ரியல் வாட்டர் அம்சம் (Surreal Water Feature) மற்றும் அல் வாஸ்ல் பிளாசாவிற்கு தினசரி அனைவரும் இலவசமாக சென்று பார்வையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அட்ராக்ஷன்ஸ் பாஸைப் பயன்படுத்தாத பார்வையாளர்களுக்கு, ஒரு பெவிலியனுக்கு தனிநபர் பெவிலியன் டிக்கெட்டுகள் ஒரு நபருக்கு 50 திர்ஹம் எனவும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் எக்ஸ்போ துபாயில் செப்டம்பர் 1 அன்றே அலிஃப் மற்றும் டெர்ரா பெவிலியன்கள் முன்கூட்டியே திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பார்வையாளர்களுக்காக எக்ஸ்போ சிட்டி துபாயானது நாளை முதலே அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே போல் UAE பெவிலியன், KSA பெவிலியன் அத்துடன் மற்ற பெவிலியன்களான, இந்தியா, பாகிஸ்தான், லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, எகிப்து மற்றும் மொராக்கோவின் பெவிலியன்கள் போன்ற பிற பெவிலியன்களும் விரைவில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.