அமீரகத்தில் வாகன பிளேட் நம்பருக்கான ஏலம் நடத்தப்படுவதும் விருப்பமான எண்ணைப் பெற மில்லியன் கணக்கில் பணத்தை கொடுப்பதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான். இது போலவே கடந்த சனிக்கிழமையன்று துபாயில் நடத்தப்பட்ட ஏலத்தின் போது துபாயில் பிரீமியம் நம்பர் பிளேட்டுகள் 37 மில்லியன் திர்ஹம்களுக்கு மேல் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் துபாய் வாகன பிளேட் நம்பரான AA-13 4.42 மில்லியன் திர்ஹமிற்கு ஏலம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் U-70, 3 மில்லியன் திர்ஹமிற்கு விற்கப்பட்டதாகவும், Z-1000 2.21 மில்லியன் திர்ஹமிற்கு விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், V-99999 என்ற எண்ணானது 1.26 மில்லியன் திர்ஹமிற்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஏலம் எடுக்க மொத்தம் 90 ஃபேன்சி நம்பர்களை இந்த ஏலத்தில் வழங்கியதாக கூறியுள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த 10 நம்பர் பிளேட்டுகளில் குறைந்தது எட்டு அமீரகத்தில் விற்கப்பட்டுள்ளன. அதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஏலத்தில், AA8 என்ற நம்பர் 35 மில்லியன் திர்ஹமிற்கு விற்கப்பட்டது. இதுவே மூன்றாவது மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட் என்பதும் குறிப்பிடத்தக்கது.