ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்து பருவ கால மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மக்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால் இதனை தடுக்கும் பொருட்டு குடியிருப்பாளர்கள் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸின் (EHS) தேசிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் இருக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் ஃப்ளூ தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட தொற்று நோய்களைக் கையாள்வதற்கான எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸின் விரிவான திட்டத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் பொது சுகாதார சேவைகள் துறையின் இயக்குனர் டாக்டர் ஷம்சா லூத்தா கூறுகையில், இன்ஃப்ளூயன்ஸா போன்ற பருவகால மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் உத்திகளுடன் இந்த பிரச்சாரம் இணைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது EHS இன் அனைத்து சுகாதார மையங்களின் தயார்நிலையை மேம்படுத்துதல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு விகிதங்களை உயர்த்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
ஃப்ளூ தடுப்பூசியை இலவசமாகப் பெற தகுதியுடையவர்கள்:
>>ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள்
>> கர்ப்பிணி பெண்கள்
>> மாற்றுத்திறனாளிகள்
>> 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்
>> நாள்பட்ட நோய்கள் கொண்ட நபர்கள்
>> ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்
>> சுகாதாரத் துறை ஊழியர்கள்
மேற்கண்ட பிரிவினர் இலவசமாக ஃப்ளூ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மற்றவர்கள் இதற்கான நிலையான கட்டணத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த தடுப்பூசியானது அனைத்து பொது சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் மற்றும் EHS இன் கீழ் உள்ள மருத்துவமனைகளில் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.