ஐக்கிய அரபு அமீரக அரசானது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும் தளர்வுகளை அறிமுகப்படுத்தி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அல் ஹோஸன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் செல்லுபடி காலம் நீட்டிப்பு, தனிமைப்படுத்தல் காலம் குறைவு, முக கவசம் அணிவதில் விலக்கு போன்றவை அடங்கும். அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான இடங்களில் இனி முக கவசம் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 28) முதல், மூன்று இடங்களைத் தவிர மற்ற அனைத்து வெளிப்புற மற்றும் உட்புற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் மட்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அந்த இடங்கள்
1. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள்
2. மசூதிகள்
3. பேருந்து போன்ற பொது போக்குவரத்து இடங்கள்
மேற்கண்ட பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மால்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் அல்லது வேறு எந்த பொது இடங்களிலும் முக கவசம் இனி கட்டாயமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, பின்வரும் பிரிவினர் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் கட்டாயமாக்கப்பட்ட நபர்கள்
1. உணவு டெலிவரி செய்பவர்கள்
2. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள்
3. கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள்
மேலும் நோய்த்தொற்று எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முக கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் முதியவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் அடங்குவர்.
அதே நேரத்தில் விமானங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கான விருப்பம் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் இது தொடர்பாக மேலும் புதுப்பிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.