அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் மருத்துவமனை சென்று அலைய தேவையில்லாமல் தங்களின் குடியிருப்பு வாசலிலேயே ஒரு புதிய அதிநவீன மொபைல் கிளினிக் வசதியைப் பெற்றுக்கொள்ள ஒரு புதிய சேவை வழங்கப்படவுள்ளது. அதன்படி அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இனி குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டு வாசலிலேயே சுகாதார சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேஹா (SEHA) ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் உருவாக்கிய மொபைல் கிளினிக் மூலம், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வரும் மொபைல் கிளினிக்கில் ஆலோசனைகள் (consultation) முதல் ஆய்வக சோதனைகள் வரை தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை அணுக முடியும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நூரா அல் கைதி கூறுகையில் “வாழ்க்கையின் தேவைகள் அதிகரிக்கும் போது, சிலர் தங்கள் உடல்நலத்தை புறக்கணிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு மருத்துவரைப் பார்க்க நேரமில்லை. சில சமயங்களில், வயதானவர்கள் மருத்துவ மனைக்குச் செல்வதை விரும்புவதில்லை. அதனால்தான் எங்களின் புதிய மொபைல் கிளினிக் ஆஃபரை இன்று அறிமுகப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த மொபைல் கிளினிக்கானது அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் அஸெஸ்மென்ட் மற்றும் கன்சல்டேஷன் பகுதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நாள்பட்ட நோய் மேலாண்மை, வயது வந்தோர் மற்றும் குழந்தை தடுப்பூசிகள், பிசியோதெரஃபி; உடல் நிறை பகுப்பாய்வு (body mass analysis), கேட்கும் சோதனை, பார்வை சோதனை மற்றும் ECG, அல்ட்ராசவுண்ட், இதய அழுத்த சோதனை மற்றும் விரிவான ஆய்வக சோதனைகள் போன்ற பல சேவைகள் இதில் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் கைதி மேலும் கூறுகையில், “இந்தப் புதிய கிளினிக்கின் மூலம், எங்கள் நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளில், எங்கள் மையங்களில் நாங்கள் பின்பற்றும் அதே உயர் தரம் மற்றும் பாதுகாப்போடு, பரவலான தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிறப்புச் சேவைகளுக்கான அணுகலை வழங்க முடியும்” என்று கூறியுள்ளார்.
அத்துடன் இது வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் கிளினிக் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காப்பீட்டை ஏற்றுக்கொள்கிறது மற்றும் இன்சுரன்ஸ் கவரேஜ் இல்லாத நோயாளிகளுக்கு குறைந்த கட்டணங்களை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான அப்பாய்மெண்ட்டை பதிவு செய்ய விரும்புவோர் 027113737 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையில் அபுதாபியில் SEHA விற்கு சொந்தமான மருத்துவமனைகளில் இருந்து தேவைப்படும் நபர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்றாற் போல் சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.