ADVERTISEMENT

அமீரகத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்களின் விலை 20% குறைய வாய்ப்பு..!!

Published: 26 Sep 2022, 6:41 PM |
Updated: 26 Sep 2022, 6:57 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்களின் விலையானது இனி குறைய வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகளில் சரக்குக் கட்டணங்களின் வீழ்ச்சியும் ரூபாய் மற்றும் பவுண்டுக்கு எதிராக அமீரக திர்ஹம் வலுவடைவதன் காரணமாக அமீரகத்தில் பணவீக்கம் குறைய உதவுவதும் அமீரகத்தில் உணவுப் பொருட்கள் கணிசமான வீழ்ச்சியைக் காண உதவும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த இரண்டு காரணங்களின் விளைவாக உணவுப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் விலை எதிர்காலத்தில் குறைந்தது 20 சதவிகிதம் குறையும் என்று சில்லறை விற்பனையாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அல் ஆதில் டிரேடிங்கின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தனஞ்சய் தாதர் கூறுகையில், “கன்டெய்னர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த காலங்களில் சரக்குக் கட்டணம் $1,100 ஆக உயர்ந்தது. அதனால் பெரும்பாலான உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்தன. ஆனால் இப்போது விலை 20 அடி கண்டெய்னர்களுக்கு $375 ஆகக் குறைந்துள்ளது மற்றும் இது $100-$150 ஆக மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவு இறக்குமதி செலவுகள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க உதவும்,” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதே போன்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் (Moody’s Investors Service) எனும் நிறுவனமானது, கண்டெய்னர்களின் சரக்குக் கட்டணங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்த விலையை விட தற்பொழுது 57 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் காலத்தின்போது சீனாவில் இருந்து கண்டெய்னர் தேவை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக, சரக்குக் கட்டணங்கள் தொற்றுநோய்களின் போது உயரத் தொடங்கியதாகவும், இதன் விளைவாக கண்டெய்னர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால் தற்பொழுது சீனாவில் இருந்து கண்டெய்னர்களின் புதிய சப்ளை மற்றும் கன்டெய்னர்களுக்கான தேவை எளிதாக இருப்பதால் உலகளவில் கண்டெய்னர்களின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் திர்ஹம்ஸினை ஒப்பிடுகையில் இந்திய, பாகிஸ்தான், ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் நாணயங்களும் கணிசமாக பலவீனமடைந்துள்ளன. எனவே, இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது மலிவானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாணயங்கள் வரலாறு காணாத குறைவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அமீரகத்திற்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 22 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரிசி, மசாலாப் பொருட்கள், உலர் பழங்கள், காய்கறிகள் போன்ற அமீரகத்தில் வசிப்பவர்கள் தினசரி உட்கொள்ளும் பல உணவுப்பொருட்களின் முக்கிய ஆதாரங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் இருப்பதால், மேற்கூறிய காரணங்களால் உணவுகள் மற்றும் பிற நுகர்பொருட்களின் விலைகள் குறைந்தது 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.