ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் ஓமானிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு வந்துள்ளார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இடையே கையெழுத்திடப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தமாக, இரு நாடுகளுக்கு இடையேயான பயண நேரத்தை 47 நிமிடங்களுக்கு குறைக்கும் ஒரு ரயில்வே நெட்வொர்க் திட்டம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அமீரகத்தின் நேஷனல் ரெயில் நெட்வொர்க்கின் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான Etihad Rail ஓமான் நாட்டின் ஓமான் ரெயிலுடன் ஒரு சம அளவிலான சொந்தமான நிறுவனத்தை கூட்டாக நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது ஓமன்-எதிஹாட் ரயில் நிறுவனம் என்று அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான முதலீட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இதன் உள்கட்டமைப்பானது ஓமானின் சோஹார் துறைமுகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 303 கிமீ நீளமுள்ள இந்த ரயில்வே அதிநவீன பயணிகள் ரயில்களைக் கொண்டிருக்கும் என்றும், அவை அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சோஹாரிலிருந்து அபுதாபிக்கு பயணிக்க ஒரு மணி நேரம் 40 நிமிடங்களாகவும், சோஹாரிலிருந்து அல் அய்னுக்கு பயணிக்க 47 நிமிடங்களாகவும் மாற்றி பயண நேரத்தை குறைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சரக்கு ரயில்கள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த முக்கிய ஒப்பந்தத்தில் எதிஹாட் ரெயிலின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாதி மலாக் மற்றும் அஸ்யாத் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்ரஹ்மான் சலீம் அல் ஹத்மி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அபுதாபி அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் “இந்த ஒப்பந்தத்தின் கீழ், புதிய நிறுவனம் அதன் நிதி வழிமுறைகள் மற்றும் அட்டவணை உட்பட திட்டத்திற்கான அடித்தளம் மற்றும் வேலைத் திட்டத்தை அமைக்கும். சோஹர் மற்றும் அபுதாபியை இணைக்கும் இரயில் நெட்வொர்க்கின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை இரு நாடுகளின் தரத்திற்கு ஏற்ப இது கையாளும்”.
”ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இடையேயான வரலாற்று மற்றும் மூலோபாய உறவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட இந்த பெரிய கூட்டு முயற்சியானது ஓமன் ரயில் மற்றும் எதிஹாட் ரயில் ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால ஒத்துழைப்பின் விரிவாக்கமாகும். இவை இரண்டையும் இணைப்பதன் மூலம் இரயில் வழியாக இரு நாடுகளும் உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் துறை தொழில்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயல்கின்றன”.
“வர்த்தக பரிமாற்றம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல், முக்கிய நகர்ப்புற மையங்களை இணைத்தல், சமூகங்களுக்கு இடையே பயணத்தை எளிதாக்குதல் மற்றும் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொருளாதார மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கு இடையே தடையற்ற போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதன் மூலம் இரு பிரிவுகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.