அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கோடைகாலத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த ஆப்ரிக்காவிற்கு வெளியே உள்ள உலகின் மிகப்பெரிய சஃபாரியான ஷார்ஜா சஃபாரி தற்பொழுது மீண்டும் திறக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக செப்டம்பர் 21 அன்று ஷார்ஜா சஃபாரி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா சஃபாரியின் இந்த புதிய சீசனில் கலந்துகொள்ளும் பார்வையாளர்கள் பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளைப் பார்ப்பதற்கும், சுவாரஸ்யமான இயற்கை சூழல்களை அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷார்ஜா சஃபாரியில், பார்வையாளர்கள் பல்வேறு சூழல்களில் இருக்கக்கூடிய ஆப்பிரிக்க பறவைகள் மற்றும் விலங்குகளின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் விலங்குகளின் இயற்கையான வாழ்விடத்தை சுற்றிப் பார்ப்பதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா சஃபாரியானது ஆப்பிரிக்க நிலப்பரப்பு, விலங்குகள் மற்றும் பறவைகளைக் கண்டறிய பார்வையாளர்களை ஊக்குவிக்கும் 12 மாறுபட்ட சூழல்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் இது 120 வகையான ஆப்பிரிக்க விலங்குகளுடன் 50,000 க்கும் மேற்பட்ட விலங்குகளை உள்ளடக்கியது என்றும், இதில் அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட விலங்குகளும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் ஷார்ஜா சஃபாரி நட்டுள்ள 100,000 ஆப்பிரிக்க அகாசியா மரங்களையும், உள்ளூர் மற்றும் ஆப்பிரிக்க இனங்களையும் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையத்தின் (EPAA) தலைவரான ஹனா சைஃப் அல் சுவைதி கூறுகையில், “ஒவ்வொரு சூழலும் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஷார்ஜா சஃபாரியில், எங்கள் பார்வையாளர்களுக்கு ஆப்பிரிக்க வனவிலங்குகளைக் கண்டறியவும் அதன் பல்வேறு சூழல்களை ஆராயவும் உதவும் ஒரு தனித்துவமான மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த சூழல் இயற்கை வளம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனத்தைப் பிரதிபலிக்கும் பறவைகள், மிருகங்கள் போன்றவற்றை இங்கு காணலாம்” என கூறியுள்ளார்.
அத்துடன் ஷார்ஜா சஃபாரி சுற்றுப்பயணங்களின் பல்வேறு கட்டங்களில் பார்வையாளர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கை உறுதி செய்வதற்கும், குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை ஷார்ஜா சஃபாரி ஏற்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.