சாலை விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதாகும். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மொபைல்களை பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்துள்ளது.
ஏற்கெனவே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில், அபுதாபியில் 100,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த குற்றத்தை புரிந்ததாகவும், இதற்காக 800 திர்ஹம்கள் அபராதம் மற்றும் நான்கு ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி காவல்துறையானது சமூக ஊடகங்களில் தனது சமீபத்திய பதிவில், வாகனம் ஓட்டும் போது தொலைபேசியைப் பயன்படுத்துவதால் பல மோசமான விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறியுள்ளது.
அத்துடன் அபுதாபி எமிரேட்டின் சாலைகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ரேடார்கள் இந்த மொபைல் போன் மீறல்களைக் கண்டறிய முடியும் என்றும், மேலும் மேம்பட்ட அமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் ரோந்துகளும் இதனை கண்காணிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் மேஜர் முகமது தாஹி அல் ஹுமிரி, வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்தும் குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் பலர் தொலைபேசியில் பேசுவது அல்லது sms அனுப்புவது போன்ற செயல்களை மேற்கொண்டவர்கள் என விளக்கமளித்துள்ளார். மேலும் வாகன ஓட்டிகள் இந்த விதிமீறல்களை மேற்கொள்ளாமல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.