ADVERTISEMENT

UAE: இனி லக்கேஜை பற்றிய கவலையில்லை..!! அபுதாபியில் 3 வருடங்களுக்குப் பின் மீண்டும் துவங்கப்பட்டுள்ள சிட்டி செக்-இன் சேவை..!!

Published: 21 Oct 2022, 3:23 PM |
Updated: 21 Oct 2022, 3:39 PM |
Posted By: admin

அபுதாபியில் சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் சிட்டி செக்-இன் சேவையானது தற்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபியில் இருக்கும் சையத் போர்ட்டில் உள்ள அபுதாபி குரூஸ் டெர்மினலின் டெர்மினல் 1ல் அமைந்துள்ள புதிய இடத்தில் இருந்து பயணிகளுக்கான செக்-இன் சேவை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் தற்சமயம், ​​எதிஹாட் ஏர்வேஸில் பயணிக்கவிருக்கும் பயணிகள் மட்டுமே இந்த சேவையைப் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செக்-இன் சேவை மூலம் பயணிகள் புறப்படுவதற்கு 24 மணி நேரத்தில் இருந்து புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் வரை செக்-இன் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை முன்கூட்டியே சரிபார்த்து, தங்களுடைய போர்டிங் பாஸ்களைப் பெற்றுக்கொண்டு பதற்றம் இல்லாமல் விமான நிலையத்திற்குச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம் பயணிகள் அதிகப்படியான லக்கேஜ்களை விமான நிலையத்தில் எடுத்துச் செல்லும் போது கூடுதல் லக்கேஜ் பொருட்களை விமான நிலையத்தில் விட்டுச் செல்வதோ அல்லது கூடுதல் எடைக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதோ போன்ற அவசியம் இன்றி கூடுதல் லக்கேஜ் பொருட்களை தங்களின் இருப்பிடத்திற்கே மீண்டும் எடுத்துச் செல்ல அவர்களுக்கு இதில் அவகாசம் உள்ளது. அத்துடன் விமான நிலையத்திற்கு வந்தவுடன், செக்-இன் செய்ய வரிசையில் நிற்கும் நேரத்தையும் அவர்கள் மிச்சப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இமிக்ரேஷன் கவுண்டருக்கு நேரடியாக சென்று அந்தந்த நடைமுறைகளை பதற்றம் இன்றி மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், செக்-இன் செய்வதற்கு வசதியான இடமாக இருந்த அல் ஜாஹியா பகுதியில் உள்ள சிட்டி டெர்மினல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவையைப் பெறுவதற்கான கட்டண விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெரியவர்களுக்கு 45 திர்ஹம், சிறுவர்களுக்கு 25 திர்ஹம்ஸ், குழந்தைகளுக்கு 15 திர்ஹம்ஸ் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் 120 திர்ஹம்ஸ் செலுத்தி இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை என 12 மணி நேரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகள் எண் 9 (மெரினா மாலில் இருந்து) மற்றும் 44 (Armed Forces Officers Club-ல் இருந்து) இந்த க்ரூஸ் டெர்மினல் பகுதிக்கு இயக்கப்படுகின்றன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, பயணிகள் 02 5833345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.