துபாயில் குளோபல் வில்லேஜின் 27வது சீசன் அக்டோபர் 25 செவ்வாய் அன்று மீண்டும் திறக்கவிருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, குளோபல் வில்லேஜுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதற்கென நான்கு பேருந்து வழித்தடங்களை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வழித்தடங்களின் விபரங்கள் பின்வருமாறு:
>> ரூட் 102: அல் ரஷிதியா பேருந்து நிலையத்திலிருந்து 60 நிமிட இடைவெளியில் குளோபல் வில்லேஜிற்கு பேருந்து இயக்கப்படும்.
>> ரூட் 103: யூனியன் பேருந்து நிலையத்திலிருந்து 40 நிமிட இடைவெளியில் பேருந்து சேவை இயக்கப்படும்.
>> ரூட் 104: அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் பேருந்து சேவை வழங்கப்படும்.
>> ரூட் 106: மால் ஆஃப் எமிரேட்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் குளோபல் வில்லேஜிற்கு பேருந்து சேவை இயக்கப்படும்.
10 திர்ஹம்ஸ் கட்டணத்தில், RTA இந்த சீசனில் டீலக்ஸ் கோச்சஸ் (deluxe coaches) மற்றும் வழக்கமான பேருந்துகளை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜின் 27-வது சீசன் வரும் ஏப்ரல் 29, 2023 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் புதிதாக பிக் பலூன் என அழைக்கப்படும் ஹீலியம் பலூன் சவாரியானது, தரையில் இருந்து 200 அடிக்கு மேல் உயரும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து கண்கவர் குளோபல் வில்லேஜ் முழுவதையும் 360 டிகிரிகளில் கண்டுகளிக்கும் வாய்ப்பை பார்வையாளர்கள் பெறலாம்.
அத்துடன் ‘ஹவுஸ் ஆஃப் ஃபியர் (House Of Fear)’, எனப்படும் பயங்கரமான பேய் வீடு, ‘டிகர்ஸ் லேப் (Diggers Lab)’ என அழைக்கப்படும் குழந்தைகளுக்கான கட்டுமான சம்பந்தமான விளையாட்டுகள் போன்றவையும் குளோபல் வில்லேஜில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு நிகழ்வுகளாகும்.