தொழில்நுட்பங்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி காண்போரை வியக்க வைக்கும் வகையில் நடத்தப்படும் Gulf Information Technology என சொல்லக்கூடிய GITEX- கண்காட்சியானது நேற்று (அக்டோபர் 10) தொடங்கி துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் டிரைவர் இல்லா தானியங்கி மினிபஸ்ஸின் மாதிரியானது, Gitex Global இல் உள்ள அபுதாபி அரசாங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அபுதாபியில் இந்த புதிய ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்தானது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (ITC) போக்குவரத்து அமைப்புகளின் திட்ட மேலாளர் சுல்தான் அல் மென்ஹாலி கூறுகையில், “இந்த திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு டிஜிட்டல் வரைபடங்கள், தொழில்நுட்பங்கள், ரேடார், LiDER மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம்” என கூறியுள்ளார்.
முற்றிலும் இலவசமான சேவைகளை வழங்கக்கூடிய இந்த பேருந்தில், ஏழு பேர் அமரலாம் என்றும், மேலும் நான்கு பேர் நின்று கொண்டு பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் W ஹோட்டல், யாஸ் வாட்டர் வேர்ல்ட், யாஸ் மெரினா சர்க்யூட் மற்றும் ஃபெராரி வேர்ல்ட் உட்பட யாஸ் ஐலேண்டின் 9 இடங்களில் இந்த சேவை மேற்கோள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் முதல் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவையான Txai, ஹைடெக் வழிசெலுத்தல் கருவிகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒன்பது நிறுத்தங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாக்ஸி குறித்து சுல்தான் மேலும் கூறுகையில், “இந்த டாக்சிகள் ஓட்டுநர் இல்லாதவை, ஆனால் எங்களிடம் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார், அவர் எல்லா நேரங்களிலும் டாக்ஸியின் இயக்கத்தை நிர்வகிப்பார்” என கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், அபுதாபியின் யாஸ் ஐலேண்டில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவையின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடித்ததாக ITC அறிவித்துள்ளது. முதல் கட்டத்தின் போது, இந்த சேவையானது 16,000 கி.மீட்டருக்கும் அதிகமாகவும், 2,700-க்கும் அதிகமான பயணிகளின் முன்பதிவுகளையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.