அமீரகவாசிகள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் துபாயின் குளோபல் வில்லேஜ் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இந்த சீசனில் பார்வையாளர்களைக் கவர்வதற்கென பல்வேறு புதுவித முயற்சிகளை நிர்வாக குழு மேற்கொண்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜ் செல்லும் பார்வையாளர்களுக்கு திகைப்பூட்டும் அனுபவத்தைத் தருவதற்காகவே பேய் வீடு என்று கூறப்படும் ‘ஹவுஸ் ஆஃப் ஃபியர் (House of Fear)’ என்ற ஒரு புதிய இடமானது இந்த சீசனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள ஹவுஸ் ஆஃப் ஃபியர், ஒரு பேய் கல்லறை, மருத்துவமனை மனநல வார்டு மற்றும் கத்தும் மரம் உட்பட ஒன்பது வெவ்வேறு அனுபவங்களில் நடிகர்களின் குழுவைக் கொண்டிருக்கும். 660 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பேய் கான்செப்ட் அமெரிக்காவின் சமீபத்திய அனிமேட்ரானிக் தொழில்நுட்பத்தைக் (animatronic technology) கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மற்றொரு புதிய ஈர்ப்பாக ‘டிகர்ஸ் லேப் (diggers lab)’ குளோபல் வில்லேஜில் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள் கட்டுமான இடங்களில் அணியும் தொப்பியை அணிந்து கொண்டு கட்டுமான இயந்திரங்களை இயக்குவது போன்ற சிறுவர்களுக்கான வேடிக்கையான கல்விச் செயலை எதிர்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் Odditorium அதன் நான்காவது ஆண்டாக குளோபல் வில்லேஜில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதிலுமிருந்து 200 க்கும் மேற்பட்ட நம்பமுடியாத காட்சிகளுடன், பல புதிய கண்காட்சிகள் மற்றும் புதிய சலுகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கடந்த மாதம் குளோபல் வில்லேஜ், குளோபல் வில்லேஜ் பிக் பலூன் பற்றிய விவரங்களை வெளியிட்டது. அதன்படி இந்த சீசனில் குளோபல் வில்லேஜில் புதிதாக பிக் பலூன் என்று அழைப்படும் ஹீலியம் பலூன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 20 பேர் வரை பயணிக்க முடியும். இந்த ஹீலியம் பலூன், ஆறு அடுக்குகளுடன், 65 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அமர்ந்து கண்கவர் குளோபல் வில்லேஜ் முழுவதையும் 360 டிகிரிகளில் கண்டுகளிக்கும் வாய்ப்பை பார்வையாளர்கள் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குளோபல் வில்லேஜிற்கான நுழைவுக் கட்டண டிக்கெட் 18 திர்ஹம்ஸில் இருந்து துவங்குகிறதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.