அமீரகத்தில் இருப்பவர்கள் எமிரேட்ஸ் ஐடிக்கு முதன்முறையாக விண்ணப்பித்திருந்தாலோ அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலோ, இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருக்காமல், ஒரு மணி நேரத்திற்குள் அந்தச் செயல்முறையை விரைவுபடுத்தி கார்டைப் பெறலாம் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் போர்ட் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் அதிகாரியான மஜீத் அல் ப்லூஷி, எமிரேட்ஸ் ஐடி விண்ணப்பித்த தருணத்திலிருந்து, அது பெறப்படும் வரையிலான செயல்முறையை விளக்கியுள்ளார். அந்த செயல்முறைக்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ICP பின்பற்றும் செயல்முறையின் விவரங்கள்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க, கிடைக்கக்கூடிய நான்கு சேனல்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும் என்று அல்ப்லூஷி கூறியுள்ளார்.
எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க நான்கு வழிகள் உள்ளன. உங்கள் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்பத்தைத் தொடங்க, பின்வரும் தளங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பார்வையிடலாம்:
1. ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
2. பதிவு செய்யப்பட்ட டைப்பிங் சென்டர்
3. ‘UAE ICP’ அப்ளிகேஷன்
4. ICP இணையதளம் – icp.gov.ae
அவர் மேலும் கூறியதாவது: “விண்ணப்பதாரர் எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பித்த பிறகு, அவர்களது பயோமெட்ரிக்ஸ் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் சரிபார்ப்போம். அது [அமைப்பில் கிடைக்கவில்லை] எனில், அவர்கள் தங்கள் பயோமெட்ரிக்ஸைப் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விரைவில் இந்த பயோமெட்ரிக் விவரங்களை ‘UAE ICP’ செயலி மூலம் வழங்க முடியும் என்றாலும், இப்போதைக்கு அவர்கள் இந்த செயல்முறையை முடிக்க ICP மையத்திற்குச் செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
நீங்கள் பார்வையிடக்கூடிய அனைத்து ICP வாடிக்கையாளர் மையங்களின் விவரங்களைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு சோதனை
“பயோமெட்ரிக் [பதிவு] முடிந்ததும், உங்களின் பாஸ்போர்ட் அல்லது ரெசிடென்ஸ் செல்லுபடியாகுமா என்பதை நாங்கள் சரிபார்ப்போம். குடியுரிமை செல்லுபடியாகும் பட்சத்தில், விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு செல்லும், அங்கு பயோமெட்ரிக் விவரங்களில் ஏதேனும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதா எனச் சரிபார்ப்போம். இது ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் தானியங்கு அமைப்பு,” என்று அல்ப்லோஷி மேலும் தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் ஐடி அச்சிடப்பட்டு டெலிவரி செய்யப்படுதல்
பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அது எமிரேட்ஸ் ஐடியின் அச்சிடும் கட்டத்திற்குச் செல்லும். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “எமிரேட்ஸ் ஐடியைப் பெறுவதற்கு எங்களிடம் இரண்டு வழிகள் உள்ளன. உங்களுக்கு அவசரமாக எமிரேட்ஸ் ஐடி தேவைப்பட்டால், பதிவு மையங்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் அதைப் பெறலாம் அல்லது ஒன்று முதல் இரண்டு நாட்களில் கூரியர் மூலம் பெறலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
உங்கள் விண்ணப்பத்தை விரைவாக பெற எவ்வளவு செலவாகும்?
ICP இன் படி செயல்முறையை விரைவுபடுத்த, விண்ணப்பதாரர்கள் சுமார் 150 திர்ஹம் கூடுதல் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.