அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் தங்களின் சர்ட்டிஃபிகேட்களை அட்டஸ்டேசன் செய்து கொள்ள, இனி ஆன்லைன் அப்பாய்மெண்ட் முறையை பின்பற்ற வேண்டும் என்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை வரும் அக்டோபர் 10 ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது பற்றி இந்திய துணைத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், துணைத் தூதரகம் சான்றளிக்கும் அட்டஸ்டேசன் சேவைகளின் செயல்முறையை சீரமைக்க ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் இப்போது அட்டஸ்டேசன் சேவைகளுக்காக, SG IVS குளோபல் சர்வீஸ் மையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆன்லைனில் அப்பாய்மெண்ட்டை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், அக்டோபர் 10 ம் தேதி முதல், தங்கள் அடையாளச் சான்றுடன் ஈமெயிலில் அப்பாய்மெண்ட் உறுதி செய்யப்பட்ட சான்றை கொண்டு வரும் விண்ணப்பதாரர்கள்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவசரகால நிகழ்வுகளைத் தவிர அப்பாய்மெண்ட் இல்லாமல் நேரடியாக சேவை மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தால் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ள, அட்டஸ்டேசன் சேவைகளை வழங்கும் SG IVS குளோபல் கமர்ஷியல் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் www.ivsglobalattestation.com என்ற இணையதளத்தின் மூலம் இந்த சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனபது குறிப்பிடத்தக்கது.