ADVERTISEMENT

விரைவில் திறக்கப்படும் துபாய் மிராக்கிள் கார்டன்..!! புதிய நுழைவுக் கட்டணம்..!! மீண்டும் தொடங்கவுள்ள RTA பேருந்து சேவை..!!

Published: 7 Oct 2022, 2:56 PM |
Updated: 7 Oct 2022, 3:02 PM |
Posted By: admin

அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்ததையடுத்து இந்த மாதம் துபாயில் மில்லியனுக்கும் அதிகமான பூக்களைக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற மிராக்கிள் கார்டன் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாய் மிராக்கிள் கார்டனின் இந்த சீசனுக்கான டிக்கெட்டுகளின் விலை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மிராக்கிள் கார்டனின் 11வது சீசன் வரும் அக்டோபர் 10 திங்கள் அன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அதன் இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான புதிய டிக்கெட் விலைகள் காட்டப்பட்டுள்ளன.

அதன்படி பெரியவர்கள் மற்றும் முதியோர்களுக்கான நுழைவுக் கட்டணம் 75 திர்ஹம்ஸ் எனவும் அதே சமயம் 3 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு நுழைவுக்கட்டணம் 60 திர்ஹம்ஸ் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, மிராக்கிள் கார்டன் டிக்கெட்டின் விலை பெரியவர்களுக்கு 55 திர்ஹமும், குழந்தைகளுக்கு 40 திர்ஹமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் இணையதளத்தில் இந்த சீசனில் புதிய உற்சாகமான அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு காத்திருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் துவங்கப்படும் RTA பேருந்து சேவைகள்

மிராக்கிள் கார்டன் திறக்கப்படுவதையொட்டி RTA அதன் பேருந்து வழித்தடமான ரூட்- 105-ஐ மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பேருந்து நிலையம் மற்றும் மிராக்கிள் கார்டனுக்கு இடையே வரும் அக்டோபர் 10 முதல் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், “இந்தச் சேவை வார நாட்களில் 30 நிமிட இடைவெளியிலும், வெள்ளிக்கிழமைகளில் 20 நிமிட இடைவெளியிலும் 5 திர்ஹம் கட்டணத்தில் இயங்கும்” என்று RTA இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT