ஷார்ஜாவில் இருக்கக்கூடிய மொத்தம் 2,440 புதிய பார்க்கிங் இடங்கள் குடியிருப்பாளர்களுக்கும் விசிட்டர்களுக்கும் பார்க்கிங் சேவைகளை வழங்குவதற்காக கட்டண இடங்களாக மாற்றப்பட்டுள்ளன என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் தற்போது காணப்படும் மக்கள்தொகை பெருக்கத்தை சமாளிக்கும் வகையில் ஷார்ஜா முனிசிபாலிட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஷார்ஜா முனிசிபாலிட்டியின் பொது பார்க்கிங் துறையின் இயக்குனர் ஹமத் அல் கெய்த் கூறுகையில், பொது வாகன நிறுத்துமிடங்களை விரிவுபடுத்துவதற்கும், அனைத்து பகுதிகளிலும் கட்டணம் செலுத்துவதற்கும் அதன் வருடாந்திர திட்டங்களுக்கு ஏற்ப ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஷார்ஜாவில் தற்போது 57,000 இடங்கள் பொது வாகன நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆய்வுக் குழுக்களால் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் கட்டணம் செலுத்தாமல் வாகனம் நிறுத்துதல் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற விதிமீறல்களுக்கு ஆய்வாளர்கள் அபராதம் விதிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ள பல பகுதிகளில் முனிசிபாலிட்டிக்கு 53 வெற்று மணல் முற்றங்கள் (kaccha parking என்று சொல்லக்கூடிய empty sandy yards) இருப்பதாக அல் கெய்த் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேவையற்ற இடங்கள் பார்க்கிங் இடங்களின் பொதுவான அழகியல் தோற்றத்தை வீணாக்குகின்றன என அவர் மேலும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “அந்த பகுதிகளில் உள்ள வாகனங்களுக்கு எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, மூன்று நாட்களுக்குள் வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என முனிசிபாலிட்டி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களானது சுற்றியுள்ள பகுதிகளின் பொதுவான காட்சிகளை சிதைத்து, சீரற்ற பார்க்கிங், வாகனங்கள் ஒன்றையொன்று மூடுவது போன்ற எதிர்மறையான நடைமுறைகளை ஈர்க்கின்றன. அத்துடன் இது வாகனங்கள் எளிதாக உள்ளேயும் வெளியேயும் செல்வதைத் தடுக்கிறது” என்று அவர் விளக்கியுள்ளார்.
உயர் அதிகாரிகள் தங்கள் வாகனங்களைத் தூய்மையாகப் பராமரிக்குமாறும், வழக்கமான வாகன நிறுத்துமிடங்களில் உரிய முறையில் வாகனங்களை நிறுத்துமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். மேலும் மற்ற வாகன ஓட்டிகளும் முடிந்தவரை பயன்பெறும் வகையில், பார்க்கிங் இடங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.