அமீரகத்தின் அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 3 முதல் நடைமுறைக்கு வந்த மேம்பட்ட விசா அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் 60 நாட்களுக்கான சுற்றுலா விசா வழங்குவது தொடங்கப்பட்டுள்ளதாக டிராவல் ஏஜெண்ட்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து டிராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் தெரிவிக்கையில், 60 நாட்களுக்கான சுற்றுலா விசாவைப் பெற ஏறத்தாழ 500 திர்ஹம் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளன.
இருப்பினும் 30 நாள் விசாவுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கான விசாவின் விலையில் இந்த விசாவில் சில வேறுபாடுகள் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பட்ட விசா அமைப்பானது அமீரகத்தின் மிகப்பெரிய அளவிலான ரெசிடென்ஸ் மற்றும் என்ட்ரி பெர்மிட் விசாக்களில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையால் அறிவிக்கப்பட்ட விவரங்களின்படி, அனைத்து நுழைவு விசாக்களும் அவை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் புதிய என்ட்ரி பெர்மிட்களில் வேலை தேடுபவர்களுக்காக தனிப்பட்ட விசா, வணிக சம்பந்தமான நுழைவுக்கான ஒரு விசா, ஐந்தாண்டு மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசா, உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க ஒரு விசா, தற்காலிக வேலைக்காக மற்றும் படிப்பு மற்றும் பயிற்சிக்காக ஒரு விசா என பல வகைகளாக விசாக்கள் பிரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.