ADVERTISEMENT

UAE: பார்க்கிங் பகுதியில் வாகனத்திற்குள் நபர் இருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டுமா..?? முனிசிபாலிட்டி கூறுவது என்ன..??

Published: 17 Nov 2022, 5:47 PM |
Updated: 17 Nov 2022, 5:59 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் பண்ணக்கூடிய இடங்களில் நிறுத்தி பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் உள்ளே காத்திருப்பது வழக்கமாக நடைபெறும் செயலாகும். அதிலும் சிலர் ஒரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக அல்லது யாரோ ஒருவருக்காக காத்திருக்க அவர்கள் ஹஸார்ட் லைட்ஸை (hazard lights) எரிய விட்டு வாகனத்தில் அமர்ந்திருப்பார்கள். இத்தகைய செயலை செய்பவர்களுக்காகவே இந்த பதிவு.

ADVERTISEMENT

ஷார்ஜா எமிரேட்டில் வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்தும் ஷார்ஜா முனிசிபாலிட்டியானது வாகனங்களுக்குள் அமர்ந்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதில் இருந்து வாகன ஓட்டிகள் வாகனத்திற்குள் இருந்தாலும் பார்க்கிங் இடத்தில் நிறுத்தும் வாகனங்களுக்கு அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷார்ஜா முனிசிபாலிட்டி இணையதளத்தில் பார்க்கிங் தொடர்பான குற்றங்களின் பட்டியலின் படி, பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தத் தவறினால் 150 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வாகனங்களை நிறுத்தினால் 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அல்லது ரிசர்வ் செய்யப்பட்ட இடங்களில் பார்க்கிங் செய்வது 1,000 திர்ஹம் அபராதத்துடன் கூடிய கடுமையான குற்றமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் தற்போது 57,000க்கும் மேற்பட்ட இடங்கள் பொது வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் முன்பு கூறியிருந்தார். இவை அனைத்தும் முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

தேவையான கட்டணத்தை செலுத்தாமல் வாகனம் நிறுத்துதல் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமித்தல் போன்ற விதிமீறல்களுக்கு ஆய்வாளர்கள் அபராதம் விதிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் பொது பார்க்கிங்கிற்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம், இரண்டு மணி நேரத்திற்கு 5 திர்ஹம் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு 8 திர்ஹம்ஸ் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் சனி முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பொருந்தும்.

மேலும் நீல நிற தகவல் குறியீடுகள் உள்ள பார்க்கிங் இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம். அத்தகைய குறிப்பிட்ட பகுதிகளில், வாகன நிறுத்தம் என்பது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டண சேவையாகும்.

சில வாகன ஓட்டிகள் மளிகை, உணவகங்கள் அல்லது பிற கடைகளில் தங்கள் ஆர்டர்களைப் பெற்று அதைப் பெறும் வரையிலும் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்துகிறார்கள். இந்த செயலுக்கு எதிராக முனிசிபாலிட்டி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நடைமுறை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் இந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டாம் என்று கடை ஊழியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.