ADVERTISEMENT

துபாயில் நாளை மெட்ரோ இயங்கும் நேரம் மாற்றம்.. முக்கிய சாலைகள் மூடல்.. மாற்றுவழிகள் அறிவிப்பு.. Dubai Ride-ஐ முன்னிட்டு நடவடிக்கை..!!

Published: 5 Nov 2022, 5:44 PM |
Updated: 5 Nov 2022, 6:13 PM |
Posted By: admin

துபாயில் கடந்த வாரம் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC) ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் DFC-யின் ஒரு பகுதியாக நாளை நடைபெறவுள்ள துபாய் ரைடுக்கு (Dubai Ride) குடியிருப்பாளர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், துபாய் மெட்ரோ நாளை நீண்ட நேரம் இயங்கத் தொடங்கும் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் மெட்ரோ

துபாய் ரைடுக்கு (Dubai Ride) குடியிருப்பாளர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், நாளை (நவம்பர் 6, 2022) அதிகாலை 3.30 மணிக்கு மெட்ரோ இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் 20, 2022 அன்று நடைபெறவுள்ள துபாய் ரன்னிற்கும் (Dubai Run), துபாய் மெட்ரோ அதிகாலை 3.30 மணிக்கு இயக்கப்படும் என்றும் இதனால் பயணிகள் துபாய் ரன்னுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மூடல்

துபாய் ரைடு நடைபெறுவதை முன்னிட்டு ஷேக் சையத் சாலையின் ஃபினான்சியல் சென்டர் ரவுண்டானாவில் இருந்து சஃபா பார்க் இன்டர்சேஞ்ச் (2வது இன்டர்சேஞ்ச்) வரையிலான பகுதியின் இரு திசைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை ஐந்து மணி நேரம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

RTA இது குறித்து தெரிவிக்கையில், “RTA உடன் இணைந்து சைக்கிள் ஓட்டுவதற்கான துபாய் ரைடு நிகழ்வின் காரணமாக, ஷேக் சையத் ரோடு மற்றும் லோயர் ஃபினான்சியல் சென்டர் நாளை (நவம்பர் 6 ஆம் தேதி) அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை மூடப்படும் என்று RTA உங்களுக்குத் தெரிவிக்கிறது. 

மாற்று சாலைகள்

மேற்கண்ட சாலைகள் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய, அல் வாஸ்ல் ஸ்ட்ரீட் (Al Wasl St), அல் கைல் ரோடு (Al Khail Rd), அல் மேதான் ஸ்ட்ரீட் (Al Meydan St), அல் அசயல் ஸ்ட்ரீட் (Al Asayel St), 2nd ஜாபீல் ஸ்ட்ரீட் (2nd Zaa’beel St), 2nd டிசம்பர் ஸ்ட்ரீட் (2nd December St) மற்றும் அல் ஹதிகா ஸ்ட்ரீட் (Al Hadiqa St) உள்ளிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்த சாலைகளில் காட்டப்படும் திசை அடையாளங்களைப் பின்பற்றுமாறும் RTA குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் ரைடு என்பது துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) முதன்மை நிகழ்வுகளில் ஒன்றாகும். இது ஷேக் சையத் சாலை மற்றும் டவுன்டவுன் துபாயில் (Downtown Dubai) உள்ள துபாயின் சின்னமான மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர், துபாய் வாட்டர் கனல் மற்றும் புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கடந்து சைக்கிள் ஓட்டுவதற்கான வாய்ப்பளிக்கிறது. கடந்த ஆண்டு துபாய் ரைடில் 33,000 பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.