ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வைரலான வெளிநாட்டு ஊழியரான ஷெபாஸ் அகமது என்பவர் எமிரேட்ஸ் டிரா குழுவிடம் இருந்து 36 டிக்கெட்டுகளை இலவசமாக பெற்றுள்ளார்.
டிக்டோக்கில் அவரைப் பற்றிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஷெபாஸ் சமூக ஊடகங்களில் ஒரே இரவில் புகழ்பெற்றார். அந்த வீடியோவில் அவர் தனது சைக்கிளுடன் டிராபிக் சிக்னலில் காத்திருக்கும் போது, சைக்கிளில் ‘ஒரு நாள் நான் பெரிய ஆள் ஆவேன் (One day, I will be a big man)’ என்ற வாசகம் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருப்பது காட்டப்படும்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவரைக் காணும் பலரும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். இதனை கவனித்த எமிரேட்ஸ் டிரா குழுவானது அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஷெபாஸ், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து, ஃப்ரீலான்ஸ் எலக்ட்ரீஷியனாக பணியாற்றத் தொடங்கியுள்ளார். இந்த சைக்கிளைப் பெறுவதற்கு முன்பு, அவர் வேலைக்காக தேராவை சுற்றி வந்ததாக கூறப்பட்டுகிறது. இது பற்றி அவர் தெரிவிக்கையில், “நான்கு மாதங்களுக்கு முன்பு எனது சைக்கிள் கிடைத்தது அதைப் பெற்ற தருணத்தில், நான் அந்த வாசகத்தை எழுதினேன்” என்று கூறியுள்ளார்.
பின் எமிரேட்ஸ் டிரா குழுவானது இவரை கண்டுபிடித்து, வெள்ளிக்கிழமை நேரலையில் கலந்துகொள்ள அழைத்துள்ளனர். அங்கு அவருக்கு 540 திர்ஹம்கள் மதிப்புள்ள 36 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வாழ்க்கையை மாற்றியமைத்து, அவர் தனது கனவில் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதில் சுவாரஸ்யமாக அவருக்கு எமிரேட்ஸ் டிராவில் இருந்து அழைப்பு வந்த அதே நாளிலேயே அவர் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான செய்தியும் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு மகள் பிறந்ததும் தனது வாழ்க்கை மாறியதாக கூறும் அவர் இதனைப் பொருட்டு தனது மகளுக்கு ‘குயின் எலிசபெத் (Queen Elizabeth)’ என பெயரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எமிரேட்ஸ் டிராவிடம் இருந்து இலவச டிக்கெட்டுகள் பெற்ற போதிலும் இன்னும் டிராவில் பங்கேற்கவில்லை என்றும், தனக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்படும் வரை டிராவில் கலந்து கொள்ளாமல் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவு பற்றி அவர் பேசுகையில், “மில்லியனுக்கும் மேலான மக்களின் கனவு நகரமாக துபாய் உள்ளது. அவர்களின் கனவுகள் இங்கே நிறைவேறுகின்றன. மக்கள் நல்ல வாழ்க்கைக்காக இங்கு வருகிறார்கள், நானும் அப்படித்தான் வந்தேன். இந்த நாட்டின் தலைவர்கள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் எனது உத்வேகம். நான் பெரிய ஆளாக வளரும்போது அவர்களின் வழியைப் பின்பற்ற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.