ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அமீரகத்தின் அனைத்து மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் முன்னணி சுகாதார வீரர்கள் அனைவருக்கும் கொரோனாவில் இருந்து மீண்டு வர அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இது பற்றி அவர் தெரிவிக்கையில் “மனிதகுலம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றை வெற்றிகரமாக முறியடித்த எங்கள் மருத்துவ ஊழியர்கள், தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் நாங்கள் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடங்கினோம். ஐக்கிய அரபு அமீரக அணிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான முக கவசம் மற்றும் கொரோனா சோதனை விதிகள் உள்ளிட்ட அனைத்திலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் மசூதிகள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் முக கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.