ADVERTISEMENT

UAE: எமிராட்டிசேஷன் விதிகளில் போலி தரவுகளை காட்டும் நிறுவனங்களுக்கு அபராதம்..!! செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல்..!!

Published: 16 Nov 2022, 8:10 PM |
Updated: 16 Nov 2022, 8:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் எமிராட்டிசேஷன் விதி அதாவது தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்தில் எமிராட்டி எனும் அமீரக குடிமக்களை பணியமர்த்திருக்க வேண்டும் என ஏற்கெனவே அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது அமீரகத்தில் உள்ள மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) மற்றும் எமிராட்டி போட்டித்திறன் கவுன்சில் (Nafis) ஆகியவை போலி எமிரேடிசேஷன் தரவு தொடர்பான அபராதம் மற்றும் தண்டனைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிறுவனத்தால் செய்யப்படும் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து இந்த அபராதங்கள் மாறுபடும் என்றும் இந்த தீர்மானத்தின்படி, நஃபிஸ் பலன்களைப் பெறுவதற்காக ஒரு நிறுவனம் போலி எமிரேடிசேஷன் அறிக்கையை தயாரித்தால், ஒவ்வொரு போலி எமிரேட்டி ஊழியருக்கும் 20,000 முதல் 100,000 திர்ஹம் வரை நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நஃபிஸ் கவுன்சில் வழங்கும் நிதி உதவி மற்றும் பிற சலுகைகள் இடைநிறுத்தப்பட்டு, அதன் மூலம் வழங்கப்பட்ட தொகைகள் திரும்பப் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் Nafis கவுன்சி்லின் நன்மைகளைப் பெறுவதற்கு தவறான ஆவணங்கள் அல்லது தரவைச் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கும் இதே அபராதம் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் பணி அனுமதி வழங்கப்பட்ட பிறகு அந்த எமிராட்டி ஊழியர் பணியில் சேராமல் இருந்து நிறுவனம் அதைப் புகாரளிக்கத் தவறினாலும், ஒவ்வொரு எமிராட்டி ஊழியருக்கும் 20,000 திர்ஹம்ஸ் என நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு எமிராட்டி பயனாளி வேலை செய்வதை நிறுத்தியதை நிறுவனம் நஃபிஸ் கவுன்சிலிடம் தெரிவிக்கத் தவறினாலும் அதே அபராதம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

அதனுடன் நஃபிஸ் கவுன்சிலின் ஆதரவு பெற்ற பயிற்சிக் காலம் முடிந்த பிறகும் எமிராட்டியை பணியில் நியமிக்கத் தவறினால், ஒரு நிறுவனத்திற்கு nafis மூலம் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெற அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Nafis என்பது எமிராட்டி மனித வளங்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், தனியார் துறையில் எமிராட்டிகள் வேலை பெறுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் துவங்கப்பட்ட ஒரு கூட்டாட்சி திட்டமாகும். இந்த திட்டமானது கடந்த செப்டம்பர் 2021 இல் தொடங்கப்பட்டது. இது சம்பள ஆதரவு, வேலையின்மை உதவி, ஓய்வூதியம், பயிற்சி போன்ற பல நன்மைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தனியார் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு சமீபத்திய எமிரேடிசேஷன் இலக்கை அடைய இன்னும் 50 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. அத்துடன் ஜனவரி 1, 2023 முதல், இந்த விதிக்கு இணங்கத் தவறிய நிறுவனங்களுக்கு ஒவ்வொரு எமிரேட்டிக்கும் மாதம் 6,000 திர்ஹம் வரை என அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.