ADVERTISEMENT

UAE: மாதம் 5 திர்ஹம்ஸில் வேலை இழந்தோருக்கான காப்பீடு திட்டம்..!! அமைச்சகம் அறிவித்த புதிய தகவல்கள்..!!

Published: 3 Nov 2022, 9:14 PM |
Updated: 4 Nov 2022, 9:17 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக வேலையின்மைக் காப்பீட்டு திட்டம் அமீரக அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே  அறிவிக்கப்பட்டிருந்தது. அமீரகத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் திடீரென வேலையை விட்டு நீங்கும் போது அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் பொருட்டு இத்திட்டத்தை அமீரக அரசு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதன்படி அமீரகத்தில் பணிபுரியும் மத்திய அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஜனவரி 1, 2023 முதல் புதிய வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) படி, இந்த காப்பீட்டுத் திட்டம் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வகையானது அடிப்படை சம்பளம் (basic salary) 16,000 திர்ஹம் மற்றும் அதற்கும் குறைவாக வாங்குபவர்களுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் காப்பீடு செய்யப்பட்ட பணியாளருக்கான பிரீமியம் மாதம் ஒன்றுக்கு 5 திர்ஹம் (அல்லது ஆண்டுக்கு 60 திர்ஹம்) என அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரண்டாவது பிரிவில் அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹமிற்கு மேல் உள்ளவர்கள் அடங்குவர். இந்த பிரிவில், மாதம் ஒன்றுக்கு 10 திர்ஹம் (அல்லது ஆண்டுக்கு 120 திர்ஹம்) என அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையிலும் இந்த காப்பீடு திட்டத்திற்கு பணம் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த காப்பீட்டுக் கொள்கையின் மதிப்பானது மதிப்பு கூட்டப்பட்ட வரிக்கு (VAT) உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது..??

எதிர்பாராத காரணங்களால் ஒரு தொழிலாளி திடீரென வேலையை இழந்தால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை ரொக்க இழப்பீடு வழங்கப்படும். இந்த மாதாந்திர இழப்பீட்டுத் தொகையின் மதிப்பானது முதல் வகை பிரிவினருக்கு 10,000 திர்ஹமிற்கும், இரண்டாவது வகை 20,000 திர்ஹமிற்கும் அதிகமாக இருக்காது என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் என்ற விகிதத்தில் மாதாந்திர அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

ADVERTISEMENT

பணியாளர்கள் குறைந்தபட்சம் 12 மாதங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் பணிபுரிந்து சந்தா செலுத்தியிருந்தால், அவர்கள் இந்த ஊதியம் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கீழ்க்கண்ட நபர்களுக்கு இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படமாட்டாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

அவர்களில் ஒழுக்கக் காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள், ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது புதிய வேலையில் சேர்ந்தாலோ இழப்பீடு பெற தகுதியற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் முதலீட்டாளர்கள், வீட்டுப் தொழிலாளர்கள், தற்காலிக வேலை ஒப்பந்தத்தில் உள்ள ஊழியர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், ஓய்வூதியம் பெற்று புதிய வேலையில் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு இந்த காப்பீடு திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.