துபாயில் இருக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடமான குளோபல் வில்லேஜ் புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கான தனது திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த புத்தாண்டின் போதும் உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து நள்ளிரவு வரை இந்த கொண்டாட்டங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதிலும் இம்முறை குளோபல் வில்லேஜ் புத்தாண்டு தினத்தன்று ஏழு முறை புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிலிப்பைன்ஸ் (இரவு 8 மணி), தாய்லாந்து (இரவு 9 மணி), பங்களாதேஷ் (இரவு 10 மணி), இந்தியா (இரவு 10.30), பாகிஸ்தான் (இரவு 11 மணி), ஐக்கிய அரபு அமீரகம் (நள்ளிரவு 12 மணி) மற்றும் துருக்கி (நள்ளிரவு 1 மணி) என ஏழு நாடுகளின் புத்தாண்டு துவங்கும் நேரத்தை கணக்கில் கொண்டு ஏழு முறை கொண்டாடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து குளோபல் வில்லேஜின் பொழுதுபோக்கு இயக்குனர் ஷான் கார்னெல் கூறுகையில் “ஒரே இரவில் ஏழு புத்தாண்டு கொண்டாட்டங்கள், எண்ணற்ற பொழுதுபோக்குகளுடன், குளோபல் வில்லேஜ் விருந்தினர்களை வரவேற்க தயாராயுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் டிசம்பர் 31, சனிக்கிழமை அன்று, குளோபல் வில்லேஜானது பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு என பிரத்தியேகமாக ஒதுக்கப்படும் என்றும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும் குளோபல் வில்லேஜ் அதிகாலை 2 மணி வரையிலும் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.