ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு ரெசிடென்ஸி விசாக்களுக்கான ஸ்டாம்பை அவர்களின் பாஸ்போர்ட்டில் முத்திரையிட வேண்டிய தேவையை அமீரக அரசானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீக்கியது. இதன் காரணமாக புதிதாக ரெசிடென்ஸி விசாவைப் பெறும் நபர்களுக்கும் விசாவினை புதுப்பிக்கும் நபர்களுக்கும் அவர்களின் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் இருக்காது என்பதால் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் நபர்கள் விமான நிலையங்களில் தாமதங்களைத் தவிர்க்க முறையான ஆவணத்தைக் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமீரகத்தில் இருந்து சொந்த ஊருக்கு வரும் பயணிகள் விமான நிலையங்களில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க தங்களின் எமிரேட்ஸ் ஐடிகளை மறக்காமல் கொண்டு வர அறிவுறுத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி இப்போது ரெசிடென்ஸி சான்றாகச் செயல்படுகின்றன என்று கூறியிருந்தது. மேலும் எமிரேட்ஸ் ஐடியின் சமீபத்திய பதிப்பில், விசா முத்திரையில் அச்சிடப்பட்ட அனைத்து தொடர்புடைய விவரங்களும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பல்வேறு விமான நிலையங்களில் உள்ள இமிகிரேஷன் கவுண்டர்களில் எமிரேட்ஸ் ஐடியில் உள்ள தரவைப் படிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அசல் எமிரேட்ஸ் ஐடியைக் கொண்டு வரத் தவறினால், சமீபத்தில் பயணம் செய்த சில பயணிகளின் அனுபவத்தின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சிக்கல்கள் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அசல் எமிரேட்ஸ் ஐடி இல்லாத பயணிகள் விமான நிலையங்களில் இமிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அசல் எமிரேட்ஸ் ஐடி இல்லாததால் அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க கால தாமதம் ஏற்பட்டு சில இன்னல்களை சந்திப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனவே இவ்வாறு பயணிக்கும் நபர்கள் தங்களின் எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச் செல்வது பயணத்தை எளிதாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.